2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இறக்காமம் குளத்தை விவசாயிகள் ஆக்கிரமிக்கின்றனர்: மீனவ சங்கங்கள்

Gavitha   / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

இறக்காமம் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் 2,030 ஏக்கராக இருந்த இறக்காமக் குளம், 2006ஆம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாக  விவசாயிகளினால் சுவீகரிக்கப்பட்டு தற்போது 1,800 ஏக்கர் பரப்பை மட்டுமே குறித்த குளம் கொண்டுள்ளதாகவும் இப்படியே தொடர்ந்து சுவீகரிப்பு இடம்பெறுமாயின் குறித்த குளம் இல்லாமல் போய்விடும் அபாயம் காணப்படுவதாக இறக்காமம் நன்னீர் மீன்பிடியாளர்கள் சங்கங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் அழைப்பின் பேரில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உள்ளிட்ட இறக்காமம் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்கள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு,  சனிக்கிழமை (09) மாலை, இறக்காமம் பிரதேசச் சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி தலைமையில், இறக்காமம் பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இச்சந்திப்பில், இலுக்குச்சேனை மீனவர் சங்கம், இறக்காமம் 1 தொடக்கம் 9 வரையிலான மீனவர் சங்கம், சம்மாந்துறை ஏ புலக் மீனவர் சங்கம், இறக்காமம் ஹூதா மீனவர் சங்கம் என 4 சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, தங்களின் பிரச்சினைகளை அமைச்சர்களிடம் முன்வைத்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாமறு கோரினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

'இறக்காமக் குளத்தில் மீன் பிடிப்பதற்கான சகல பதிவுகளையும் மேற்கொண்டு, அதன் மூலம் மீன்களை பிடித்து வருகின்றோம். பதிவுகள் எதுவுமே செய்யாத பலர் இக்குளத்தில் மீன்பிடித்து வருவதால், ஒரு நாளைக்கு 3 கிலோகிராம் மீன் பிடிபடுவதே மிகவும் அரிதாக உள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.

இக்குளத்தை நம்பி 500 மீனவர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், தமக்கு ஏற்பட்ட நிலைமைகளைப்பற்றி கடந்த காலங்களில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த 3 அமைச்சர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவில்லை என்று இலுக்குச்சேனை மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இறக்காமம் ஹூதா மீனவர் சங்கத்தின் தலைவர் கூறுகையில்,

'சுமார் 230 ஏக்கர் குளம், விவசாயிகளால் சுவீகரிக்கப்பட்டு அதிலுள்ள நீரின் மூலம் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது.

விவசாயிகளினால் சுவீகரிக்கப்பட்ட 230 ஏக்கரை மீள பெற்றுத்தரவேண்டும். பதிவு செய்த மீன்பிடிச் சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் மாத்திரம், குறித்த குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

மேலும், சுதந்திரமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கும், தொழில் செய்வதற்கான நடவடிக்கைகளுடன் தங்களுக்கான மீன்பிடி இறங்குதுறை ஒன்றும் அமைத்துத்தரவேண்டும்' என்று அவர் கோரிக்கை முன்வைத்தார்.

இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கூறுகையில்,

'மாகாண அதிகாரத்துக்குக் கீழுள்ள எப்பிரச்சினையாக இருந்தாலும் அப்பிரச்சினைகளை மாகாண அரசுடன் மத்திய அரசு கலந்துகொண்டு பேசி அதற்கான தீர்மானங்களை எடுக்கப்படவேண்டும். இது அவ்வாறில்லாமல் ஒரு ஒழுங்கீனமற்ற முறையில் எல்லா விடயங்களிலும் மத்தியரசு தலையிட்டு வருகின்றது.

இவைகள் ஒரு பக்கமிருக்க, உங்களின் பிரச்சினைகள் தொடர்பாக இறக்காமம் பிரதேசத்திலுள்ள சகல மினவச் சங்கங்களின் தலைவர், செயலாளர்களை மிக விரைவில் திருகோணமலைக்கு அழைத்து, இது தொடர்பான சகல உயரதிகாரிகளுடனான சந்திப்பொன்றையும் நடத்தி இறக்காமக் குளத்தின் எல்லை நிர்ணயத்தையும் அதன் சட்ட நுணுக்கங்களையும் அறிந்து அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதுடன், இக்குளத்தில் மீன் குஞ்சுகளை விடுவதற்கு மீன் குஞ்சுகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X