2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு

Freelancer   / 2022 ஜூன் 01 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தரை முதலை தாக்கியதில்  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் கடந்த திங்கட்கிழமை (30) காலை தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 55 வயதுடைய நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீட் ஹூசைன் என்பவராவார். உயிரிழந்தவரின் சடலம் மறுநாளான செவ்வாய்க்கிழமை (31)  காலை முதலை தாக்குதலுக்குள்ளான நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தது.

07 பிள்ளைகளின் தந்தையாகிய இவர் ஒரு இசைக் கலைஞனாவார். இவர் மிருதங்கம் வாசிப்பதில் சிறந்து விளங்கியதுடன் மக்களினால் "டோல் மாஸ்டர்" என அழைக்கப்பட்டார். கடந்த வருடம் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவத் தினத்தன்று, காலை தனது வளர்ப்பு மாடுகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்த களியோடை ஆற்றின் வடக்குப் புறத்தில் இவரது துவிச்சக்கர வண்டியும்  சேர்ட்டும்  பாதணியும் காணப்பட்டதுடன், மேலும் வெட்டப்பட்ட புற்களும் தலையில் அணிந்திருந்த தொப்பியும் புல்லை எடுத்துச் செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பையும் அந்த இடத்தில் அநாதரவாக காணப்பட்டதை அடுத்து உறவினர்கள் மற்றும் மக்களினால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன் சடலமாக மீட்கப்பட்டவர்  ஒரு சிறு அளவு புல்லை வெட்டிய பின்னரே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாமென்று அங்கு கிடைக்கும் அடையாளங்களின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

முதலையின் தாக்குதலில் மரணித்தவர் நாளாந்தம் தமது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். காலையில் சென்றவர் காலை 9.00 மணியளவில் வீடு திரும்புவது வழக்கமாகும்.

இந்தப் பின்ணணியில் புல் வெட்ட சென்றவர்  நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் ஆற்றிலும், அதனைச் சூழவுள்ள இடங்களிலும் உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர்  கடற்படையினரும் உடலைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட  நிலையில்,   தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தென்னந்தோட்டத்தில் உள்ள நீரோடையில் உள்ள முதலையின் புதைகுழி ஒன்றுக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புல் வெட்டிய இடத்திலிருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேற்படி சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .