2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Kogilavani   / 2016 ஜனவரி 21 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், நடராஜன் ஹரன்

கடந்தகால அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அரசியல் தலையீடுகள் மட்டுமன்றி பக்கசார்புடன் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.  அந்நிலை மாறி இன்று இடம்பெறும் கூட்டமானது நியாயமானதும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்கின்ற சுதந்திரமான முடிவுகளை எடுக்க கூடியதாக அமைந்துள்ளதாக  அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற பிரதேசத்துக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தின்போது, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் இவ்வருடத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா தெளிவுப்படுத்தினார்.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசப் பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் பனங்காடு கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இணைந்து அவ்வைத்தியசாலையில் தற்போது நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும், அங்கு காணப்படும் கட்டடப் பற்றாக்குறையால் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தினர்.

கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், காட்டு யானைகளால் தாம் அன்றாடம் எதிர்நோக்கி வருகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும்  விளைச்சல் பாதிக்கப்படல் மற்றும் நீர்ப்பாசனப் பிரச்சனைகள் என்பன தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

முறைப்பாடுகளுக்கு பதிலளித்த அவர், பாடசாலை மற்றும் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் யானைகளின் அத்துமீறல்களைத் தடுப்பதற்கான மின்சார வேலிகளை அமைக்கும் வேலைத்திட்டத்துக்கான முன்மொழிவுகள் ஏற்கனவே அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, அவை அங்கிகரிக்கப்பட்டு, தற்போது அவ்வேலிகளை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்டதோடு, நீர்ப்பாசனப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் பொருட்டு பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தோடு தொடர்புகொண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X