2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஒலுவில் துறைமுக அபிவிருத்தி; காணிகளை இழந்தோருக்கு நட்டஈடு வேண்டும்

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக 2008ஆம் ஆண்டு காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை தான் கடிதம் அனுப்பியுள்ளதாக  ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக காணி இழந்தோர் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.அன்சார் தெரிவித்தார்.

அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, 'ஒலுவில் துறைமுகமானது டென்மார்க் அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக 2008ஆம் ஆண்டு 48 பேரின் காணிகள் மொத்தமாக 49.5 ஏக்கர் சுவீகரிக்கப்பட்டது. இதில் 32 பேரின் காணிகளுக்கு அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் நட்டஈடு வழங்குவதற்காக விலை மதிப்பீடு செய்யப்பட்டது. ஏனையோரின்; காணிகளுக்கு இதுவரையில் விலை மதிப்பீடு செய்யப்படவில்லை.

மேலும், விலை மதிப்பீடு செய்யப்பட்ட காணி உரிமையாளர்களில் 19 பேர் தங்களின் பொருளாதார நிலைமை, பிள்ளைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஒரு பேர்ச் காணிக்கு 30 ஆயிரம் ரூபாய் படி நட்டஈடு பெற்றுக்கொண்டனர்.

அரச விலை மதிப்பீடு அதிகூடியது என்ற அடிப்படையில் அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் நிர்ணயிக்கப்பட்ட நட்டஈட்டை வழங்குவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை மறுத்துள்ளது. சட்டப்படி கிடைக்க வேண்டிய நட்டஈட்;டைப் பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அது பலனளிக்கவில்லை' என்றார்.

'நட்டஈடு வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டமை, அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றமை தொடர்பில் தங்களுக்கு 2014ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களால் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 2015.01.29 அன்று சிறிகொத்தாவில் நடைபெற்ற விசாரணையின்போது, விசாரணைக் குழுவினரால் 'பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் பழிவாங்கலுக்கும் அநீதிக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் எதிர்காலத்தில் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்;' எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X