2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடந்த 5 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் வருமானம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 05 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபைக்கு சுமார் 12 கோடி ரூபாய்   வரிகள் ரீதியான வருமானம் நிலுவையாக இருந்துவந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களில் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என மாநகர சபை  ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட் கிழக்கு மாகாண சபையின் பிரதம கணக்காய்வாளராகவும் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.அப்துல் மஜீத் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு பொறியியலாளராகவும் பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றனர். இவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு, மாநகர சபையில் சனிக்கிழமை (04) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த காலத்தில் இம்மாநகர சபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட வேண்டிய சோலை வரியாக சுமார் ஒன்பது கோடி ரூபாய் உட்பட  வர்த்தகர்களினால் செலுத்தப்பட வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்கள் அடங்கலாக சுமார் 12 கோடி ரூபாய் நிலுவையாக இருந்து வந்தது.

இந்த நிலுவைத் தொகையில் இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான ஐந்து மாதங்களில் சோலை வரி அறவீடாக சுமார் 40 இலட்சம் ரூபாயும் வர்த்தக அனுமதிப்பத்திரம் மூலம் சுமார் 60 இலட்சம் ரூபாயுமாக மொத்தம்; ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இவ்வருடத்தில் எஞ்சியுள்ள ஏழு மாத காலப்பகுதியில் குறைந்தது ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய் நிலுவையை அறவிட முடியும் என்று  எதிர்பார்க்கின்றோம்' என்றார்.

'மேலும், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எமது கணக்காளரினால் அனுப்பப்படும் அறிவுறுத்தல் கடிதத்துக்கு மேலதிகமாக மாநகர சபையின் சட்ட அதிகாரி ஊடாகவும் கட்டளைக் கடிதங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதன் மூலம் இன்னும் கூடுதலான நிலுவையை அறவீடு செய்ய முடியும் என்று நம்புகின்றோம்.

இவ்வாறிருக்க, எமது வங்கிக் கணக்கில் சுமார் இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபாய் நிரந்தர வைப்பாக உள்ளது. எத்தேவைக்காகவும் அத்தொகையிலிருந்து ஒரு சதத்தையேனும் மீளப் பெற முடியாது' எனவும் அவர் மேலும் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X