2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கரும்புச் செய்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளுக்கான உத்தரவாதப்பத்திரத்தை உறுதியாக மாற்றித் தர வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அம்மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

திகாமடுல்ல ஒருங்கிணைந்த விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பும் அகில இலங்கை விவசாயிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி அம்பாறை நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தடியிலிருந்து ஆரம்பமாகி, மாவட்ட செயலகம்வரை சென்றடைந்தது.

இதில் மூவின விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படும்; காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும். தரிசுக் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். கரும்புச் செய்கைக்காக கம்பனிகள் வழங்கும் கடனுக்கு கூடிய வட்டி அறவிடுகின்றமை தடைசெய்யப்பட வேண்டும்.  நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் உரமானியம் கரும்புச் செய்கையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

மேலும், கரும்பு அறுவடைக் காலத்தின்போது கம்பனிகள் வழங்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுவதுடன், இக்காலதாமதத்தினால் ஏற்படும்; நட்டத்துக்கு பதில் கூறவேண்டும். அதிக விலையில் கரும்பை கொள்வனவு செய்ய வேண்டுமெனவும் கரும்புச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது, ஆலம்குளம் கரும்புச் செய்கைக்குழு விவசாய அமைப்பின் செயலாளர் யூ.கே.சம்சுதீன் தெரிவிக்கையில், 

'கடந்த 30 வருடங்களாக கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படும் காணி உரிமையாளர்கள், தங்களின் உத்தரவாதப்பத்திரத்தை உறுதியாக மாற்றித் தருமாறு   முன்னர் இருந்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதற்காக எவ்வித நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.

மேலும் கரும்புச் செய்கையாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு  வழங்காது கடந்த  ஆட்சியாளர்களைப் போன்று அரசாங்கம்  காலம் கடத்துமாயின், பாரியளவிலான தொடர் ஆர்ப்பாட்டங்களை செய்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவோம்' என்றார்.

அம்பாறை மாவட்டத்தின் ஹிங்குரானை, கல்லோயா, நுரைச்சோலை, ஆலம்;குலம் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஹெக்டேயரில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .