2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்குகின்ற காணிப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல், பொத்துவில் பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

வேகாமம், கனகர் கிராமம், கரான்குவ பள்ளியாண்ட வட்ட, றத்தல், கிரான் கோமாரி போன்ற இடங்களில் காணிகளை இழந்து கஷ்டப்படுகின்ற விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகைதந்து தங்களின் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வனவிலங்குகள் திணைக்களம், வனவளங்கள் திணைக்களம், காணிப் பயன்பாடு  திணைக்கள அதிகாரிகளிடம் குறித்த பிரச்சினைகளின்  உண்மையைக் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டறிந்தார்.

இதன் கருத்துத் தெரிவித்த அவர், 'காணிக் கச்சேரி  தேவையான இடங்களில்  நடத்துவதற்கு  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு  உத்தரவுப்பத்திரங்கள்  வழங்குவதற்கும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

கிரான் கோமாரியில் வனபரிபாலன  திணைக்களம் எல்லையிட்டு விவசாயம் செய்யாமல் தடுத்த  இடங்களில்  உள்ளவர்கள் வைத்திருக்கும்  சில உத்தரவுப்பத்திரங்கள்  போலியானவை என கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு போலியான  பத்திரங்கள் வைத்திருப்பவர்களை  விடுத்து  ஏனையோர்களுக்கு வேறு இடங்களில் அவர்கள்  வைத்திருந்ததற்குச் சமனான காணிகள்  வழங்கப்படும்.

றத்தல்  பிரதேசத்தில் உள்ள காணிக்கு  பாணமையைச் சேர்ந்த  மக்களும்  உத்தரவுப்பத்திரம்  வைத்திருக்கின்றார்கள். அதற்குரிய வரைபடமும் இருப்பதாக அறியக்கிடைத்தது. எனவே  இரு சமூகங்கள்  சம்மந்தப்பட்டுள்ள இப்பிரச்சினையை  சுமூகமாக தீர்க்க வேண்டும். ஏற்கனவே  மானிய அடிப்படையில் பசளைகள் பெற்று வந்தவர்களின் பெயர்ப்பட்டியலின்  அடிப்படையில்  அவர்களுக்குரிய காணிகள் கிடைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும்.

வேகாமம் சம்மந்தமாக  என்னால்  தனியே முடிவெடுக்க முடியாது. பிரதியமைச்சர் பைஷால் காசீம், வனவிலங்குகள் திணைக்களம், சுற்றுச்சூழல்  திணைக்களம், வனபரிபாலன திணைக்களம் போன்றவற்றின்  தலைவர்களுடன் கொழும்பில்  பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே  முடிவெடுக்க முடியும். அந்தக் கூட்டம்  நடைபெறும்வரை  தயவுசெய்து  ஒருவரும் அந்தக்காணிகளுக்குள்   விவசாய  நடவடிக்கைகளுக்காக செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

கனகர் கிராமம்  காணிகள் யானைகளின்  சஞ்சார பாதையாக  பயன்படுத்துவதற்காக  வனவிலங்குகள் திணைக்களத்தினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த  இடத்தில்  உள்ளவர்கள்  வைத்திருக்கும் காணி உத்தரவுப்பத்திரம்  லாகுகல  பிரதேச சபை  உருவாக்கப்பட்டதன் பின்னர்  பொத்துவில்  பிரதேச செயலகத்தினால்  வழங்கப்பட்டிருப்பது  தெரியவருகிறது. இக்காணியை லகுகல  மக்களும்  கேட்கின்றனர். இருப்பினும், விவசயிகளாகிய உங்களது நன்மை கருதி  யானைகள் சஞ்சாரம் செய்யும் இடத்திற்காக  ஒதுக்கப்பட்ட காணி  போக  காணிகள் எஞ்சினால்   உண்மையான உத்தரவுப்பத்திரம்  வைத்திருப்போருக்கு  அவை பகிர்ந்தளிக்கப்படும்.

திருக்கோவில், லகுகல  பிரதேச செயலகங்களின்  எல்லை சம்பந்தமான பிரச்சினைகளை  உரிய பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பில்  தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

இதனைத்தொடர்ந்து  கருத்துத்தெரிவித்த பிரதியமைச்சர், 'பொத்துவில் காணிகளின் பிரச்சினை பற்றி பேச பல கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.  ஆனால்,  இன்றைய சந்திப்பு  கிட்டத்தட்ட அரைவாசியான  பிரச்சினைகளுக்கு தீர்வினை தந்துள்ளது.
அரசாங்க அதிபர் அவர்கள் எதிர்வரும் இரு வாரங்களினுள் இப்பிரச்சினைகளை  தீர்த்துவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கொழும்பில் நடைபெற உள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகளை தான்  முன்னெடுப்பதாகவும்  உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .