2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

காரைதீவு கடற்கரை பாதுகாப்பு வலயத்தின் தூரத்தை குறைக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தின் கடற்கரை பாதுகாப்பு வலயம் 65 மீற்றர் தூரத்திலிருந்து 50 மீற்றராக குறைக்குமாறு காரைதீவு சக்தி மீன்பிடிச் சந்தைப்படுத்தல் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைதீவு பிரதேச செயலகத்தில் அப்பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கரையோரப் பாதுகாப்பு வலயம் தொடர்பான கலந்துரையாடலின்போதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;, 'காரைதீவுப் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையின்போது, 52 கரையோரத் தோணிகளும் 64 இயந்திரப்படகுகளும் 91 மாயாவலைத்தோணிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு 1,823 மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போதுள்ள கடற்கரைப் பகுதியில் பிடிபடும் மீன்களைப் பதப்படுத்தக்கூட போதிய இடவசதி இல்லாமல் மீனவர்கள் கஷ்டப்படுகின்றனர்' என்றார்.  

'கரையோர பாதுகாப்புச்சட்டம், கரையோரச் சூழல் மாசடைதல் பற்றியெல்லாம் இங்கு கூறப்படுகின்றது. இச்சட்டங்கள் பரவலாக அனைத்துப் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. நீரைப் பெறுவதற்காக தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதனை நிவர்த்திசெய்வதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

பெரும்பாலான மீனவர்கள் படிப்பறிவில் குறைந்தவர்கள். எனவே, திணைக்களம் முன்வைக்கும் சட்டதிட்டம் தொடர்பில் மீனவர்களுடன் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடி தெளிவுபடுத்த முன்வரவேண்டும்.

அவர்களை அச்சுறுத்தும் பாணியில் தகவல்களையோ, சட்டங்களையோ திணிக்கக்கூடாது. கரையோர பாதுகாப்புத்திட்டம் மீனவர்களைப் பாதுகாக்கும் திட்டமாக இருக்க வேண்டுமே தவிர, அது அவர்களை அச்சுறுத்தும் திட்டமாக இருக்கக்கூடாது. மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்துக்கு  முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X