Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், யூ.எல். மப்றூக்
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையாகத் தயமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும், மத்திய அரசின் சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆராயும் ஆலோசனைக் கூட்டம், அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் எல்.எம். வபா தலைமையில் நேற்று சனிக்கிழமை இரவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இதில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் நசீர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
அமைச்சர் நசீர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
'இந்த வைத்தியசாலையின் தோற்றத்தினை மாற்ற வேண்டும், இதற்கான இடப்பரப்பினை விஸ்தரிக்க வேண்டும் என்கிற எண்ணம், மாகாணசபை உறுப்பினராக இருந்தபோதே எனக்குள் இருந்தது. அதை நிறைவேற்றுவதற்கான சர்ந்தப்பம் இப்போது கிடைத்துள்ளது.
இந்த வைத்தியசாலைக்கு இடப் பற்றாக்குறை உள்ளது. எனவே, வைத்தியசாலையின் முன்பாகவுள்ள காணியினை, அதன் உரிமையாளரிடம் கொள்வனவு செய்து, வைத்தியசாலைக்கு வழங்க வேண்டும் என்கிற ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளேன். குறித்த காணியினை விலையாக வழங்குவதற்கு அதன் உரிமையாளரும் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அரசாங்க நிதியிலிருந்து இந்தக் காணியை உடனடியாகப் பெற முடியாது. எனவே, இந்த ஊரிலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன், குறித்த காணியினை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதன்படி வெளிநாட்டிலுள்ள நண்பர் ஒருவர் அதற்காக 10 இலட்சம் ரூபாவினை அன்பளிப்பாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார். நானும் 10 இலட்சம் ரூபாவினை எனது சொந்த நிதியிலிருந்து வழங்கவுள்ளேன். எனவே, அட்டாளைச்சேனையில் உள்ளவர்கள் இந்த வைத்தியசாலைக்குத் தேவையான காணியினை கொள்வனவு செய்வதற்கான மேலதிக நிதியினை அன்பளிப்பாக வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு எவ்வளவு காலம் என் வசம் இருக்கும் என்று தெரியாது. அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதியுடன் கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைகிறது. அதற்கு முன்பாகவும் மாகாண சபைகள் கலைக்கப்படலாம் என்கிற பேச்சுக்களும் உள்ளன. எனவே, இதற்கிடையில், எனது ஊரான அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலைக்குத் தேவையானவற்றினை, முடிந்தளவு செய்து விட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து நான் பல தடவை பேசியிருக்கிறேன். இந்த வைத்தியசாலைக்குத் தேவையானவற்றினைச் செய்து தருவதாக அவர் உறுதியளித்திருந்தார். அந்தவகையில், அவர் தனது அமைச்சினூடாக 40 மில்லியன் ரூபாவினை இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கு வழங்கியுள்ளார்.
அதேவேளை, அட்டாளைச்சேனை வைத்தியசாலையினை ஆதார வைத்தியசாலையாக மாற்றினால் மட்டும் போதாது. இங்கு ஒரு விசேட பிரிவினையும் உருவாக்க வேண்டுமென்று விரும்பினோம். அதற்கும் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கிணங்க, இங்கு விபத்து மற்றும் எலும்பு முறிவு தொடர்பான விசேட சிகிச்சைப் பிரிவொன்றினை உருவாக்கவுள்ளோம். அதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் ஆளணி பற்றிய மதிப்பீட்டு அறிக்கையினை வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு மத்திய சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது. மாகாண சுகாதாரப் பணிப்பாளரும் அந்த அறிக்கையினைத் தயாரித்து முடித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் வருடாந்த நிதி ஒதுக்கீடினூடாக, 40 மில்லியன் ரூபாவினை அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு ஒதுக்கியுள்ளேன்.
மேற்படி நிதிகளினூடாக, இங்குள்ள பழைய கட்டிடங்களை அகற்றி விட்டு, 04 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை, இந்த வைத்தியசாலையின் முகப்பினை அழகுடன் நிர்மாணிப்பதற்காக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் நிதியிலிருந்து 02 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கும் நான் உத்தேசித்துள்ளேன்.
மேலும், இந்த வைத்திசாலைக்கு புதிதாக ஓர் அம்பியுலன்ஸ் வாகனத்தினையும் வழங்கியுள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் அது இங்கு வந்து சேரும். அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றினை எதிர்காலத்தில் தீர்த்து வைக்க எண்ணியுள்ளேன்.
எனவே, அட்டாளைச்சேனை வைத்தியசாலையினை ஒரு முன்மாதிரியான, சிறந்த வைத்தியசாலையாக மாற்ற வேண்டும் என்கிற எனது முயற்சிக்கு, இந்தப் பிரதே மக்களும், பிரமுகர்களும் ஆதரவு வழங்க வேண்டும். எனக்கு தோள் கொடுத்து உதவ வேண்டும். தனியாக இதை என்னால் சாதிக்க முடியாது' என்றார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago