2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா    

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்திலுள்ள அக். றஹ்மானியா வித்தியாலயத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி அங்கு இன்று புதன்கிழமை (20) ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.  

ஆலங்குளம் றஹ்மானிய வித்தியாலய அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்பு, கிராம அபிவிருத்திச் சங்கம், மகளிர் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புகள், ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஆலங்குளம் மத்திய வீதியில் அமைந்துள்ள தபால் கந்தோருக்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணி, அவ்வித்தியாலயத்தைச் சென்றடைந்தது. இதன் பின்னர்,   அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலியிடம் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் மகஜரைக் கையளித்தனர்.

இந்த வித்தியாலயத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டுசென்று தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, நிரந்த அதிபர் இல்லாமை, வகுப்பறைக் கட்டடம், விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லாமை, கற்றல், கற்பித்தல் செயற்பாட்டுக்கான சூழல் இல்லாமை, தரம் ஐந்து மற்றும் க.பொ.த. சாதாரணதரம் கற்பிப்பதற்கு பொருத்தமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை, விளையாட்டு மைதானம், சுற்றுமதில் அமைக்கப்படாமை, பெற்றோர்களிடம் பணம் அறவிடுவதை நிறுத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர் கூறினர்.

இதன்போது ஆலங்குளம் ஜும்மா பள்ளிவாசலின் தர்மகர்த்தா மற்றும் மகளிர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி ஆகியோர் தெரிவிக்கையில், 'கஷ்டப் பிரதேசத்திலுள்ள இப்பாடசாலை அமையப்பெற்று 55 வருடங்களுக்கு மேலாகியும் எந்தவித அபிவிருத்தி வேலைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இப்பாடசாலையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பொருத்தமான சூழல் இன்மையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையும்  அதிகரிக்கின்றது. பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் குறைபாடுகளுடன் பாடசாலையை கொண்டுசெல்ல முடியாது என்பதற்காக ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம். இதற்கான தீர்வை வழங்காது இழுத்தடிப்புச் செய்யப்படுமாயின், பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பாது தொடர்ந்து வீதியிலிருந்து போராட்டம் நடத்தி உலகறியச் செய்வோம்' என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X