2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கிழக்கு கடிதத் தலைப்பில் வடகிழக்கு இலட்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தமது கடிதத் தலைப்பில் 'வடகிழக்கு மாகாணத்துக்கான இலச்சினையை பயன்படுத்தி வருவதானது நாட்டின் அரசியலமைப்பை மீறுகின்ற மிகவும் பாரதூரமான விடயமாகுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, கடந்த பத்து வருடங்களாக அம்மாகாணங்கள் தனித்தனியாக செயற்பட்டு வருகின்ற நிலையில், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு இவ்வாறு செய்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அச்சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், '2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, அவை இரண்டும் தனித்தனியாக இயங்கி வருகின்றன.

இவ்விரு மாகாணங்களும் இணைந்திருந்தபோது அதன் உத்தியோகபூர்வ இலச்சினையானது யாழ், நெற்கதிர் மற்றும் மீன் என்பவற்றைக் கொண்டிருந்தது. அம்மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாண சபையின் இலச்சினையானது பனை பொறிக்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாண சபையின் இலச்சினையானது மீன், மான் மற்றும் கழுகு ஆகிய பிராணிகளை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டு பாவனையிலிருந்து வருகின்றன'

ஆனால், கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழு சில சந்தர்ப்பங்களில் தமது கடிதத்தலைப்பில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கான இலச்சினையைப் பயன்படுத்தி வருவதை அவதானிக்கிறோம். குறிப்பாக, 9ஆம் திகதி சனிக்கிழமையன்று கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்படவுள்ள போட்டிப் பரீட்சை ஒன்றுக்கு அதன் செயலாளரினால் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டையில் அந்த இலச்சினையே பொறிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் செயலாளர் ஒருவர் இவ்வாறு நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் சட்ட ரீதியற்ற செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது மிகவும் பாரதூரமான குற்றமாகும்.
மாகாண அரச சேவை ஆணைக்குழுவென்பது அந்த மாகாண நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதுடன், அங்கு ஏற்படுகின்ற பிணக்குகளை தீர்த்துவைக்கின்ற பணிகளையும் மேற்கொள்கின்ற ஒரு முக்கிய நிறுவனமாகும். இந்நிலையில் அதன் செயலாளர் பொறுப்பற்ற முறையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் எனில் அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரச ஊழியர்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? எனவே, நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாக, நடைமுறையில் இல்லாத, செயலிழந்த ஒரு சபையின் இலச்சினையை கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கையில் பயன்படுத்தியுள்ள குறித்த செயலாளரை உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தி, அவரை அப்பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X