2025 மே 19, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண நீர்ப்பாசன உப -காரியாலயத்தை தரம் உயர்த்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 03 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் உள்ள  கிழக்கு மாகாண நீர்ப்பாசன உப -காரியாலயத்தை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயமாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை மாகாண சபை இதுவரையில் எடுக்கவில்லை என்பதுடன், இக்காரியாலயத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அம்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கடந்த ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக நான் பதவி வகித்தபோது, விவசாயிகளின் நலன் கருதி கிழக்கு மாகாண நீர்ப்பாசன உப –காரியாலயம் 2010ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

இந்த உப -காரியாலயம் சிறப்பாக இயங்குவதுடன், பொத்துவில் பிரதேசத்தில் உள்ள விவசயாக் குடும்பங்களின் வருமான அதிகரிப்புக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது' என்றார்.

'2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை அமைச்சரவை அனுமதி வழங்கியும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இதுவரையில் இக்காரியாலயம் தரம் உயர்த்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் கூட்டங்களில் தெரிவித்தபோதும், விரைவில் தரம் உயர்த்தப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டது. இருப்பினும், இக்காரியாலயம் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது' என்றார்.

'இக்காரியாலயம் தரம் உயர்த்தப்படாமையால் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பாணமை, பொத்துவில், லகுகல பிரதேச விவசாயிகள் தங்களின் தேவைகளுக்காக நீண்டதூரம் பயணித்து தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்துக்குச் செல்கின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X