2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பிரமதருக்கு கடிதம்

Kogilavani   / 2016 மார்ச் 09 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம்செய்யவுள்ள நிலையில், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் அவர் வழங்கியிருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டி, சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அவருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

மன்றத்தின் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மத் ஆகியோர் கையொப்பமிட்டு செவ்வாய்க்கிழமை (08) அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சிமன்றம், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் (2015) முடிந்த கையோடு பெற்றுத்தரப்படும் என்கிற வாக்குறுதி இதுவரைக்கும் நிறைவுக்கு வராமல் இருப்பது குறித்த கவலையான விடயத்தை, இக்கடிதத்தின் மூலம் தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

கடந்த 9.8.2015 ஆம் திகதி கல்முனை நகரில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசார மேடையில,; அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சிமன்ற கோரிக்கை, தேர்தல் முடிந்த கையோடு நிறைவுக்கு கொண்டு வரப்படும் என தாங்கள் அளித்த வாக்குறுதி ஞாபகமிருக்கும் என கருதுகின்றோம்.

இதனை பிரதான இலக்காக கொண்டே தங்களது கட்சிக்கு வரலாறு காணாத வெற்றியை இந்த மக்கள் பெற்றுத்தந்தார்கள். ஆனால், அந்த வாக்குறுதி பல மாதங்கள் கடந்தும் நிறைவுக்கு கொண்டு வரப்படவில்லை.

இதனை நினைவுப்படுத்தி சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றமாகிய நாம், உங்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை தேர்தல் முடிந்த கையோடு உங்களது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.

எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாறையில் இடம்பெறவுள்ள முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் நீங்கள் பங்கேற்கவுள்ளீர்கள்.

அதேமேடை- அதே மக்கள்- அதே வாக்குறுதி என்றில்லாமல் நீங்கள் இந்த நாட்டின் கனவான் அரசியல் தலைவர் என முழு நாடும் போற்றும் நிலையில், ஏனைய அரசியல் தலைமைகளை போலல்லாது கொடுத்த வாக்குறுதியை எத்தகைய இழப்புகள் நேர்ந்த போதிலும் காப்பாற்றும் சக்திமிக்க தலைவர். ஆனால் எமது சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி மட்டும்; இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றமையானது எமது மக்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, எதிர்வரும் 19ஆம் திகதிய உங்களது விஜயமானது சாய்ந்தமருது மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய நிலையில், கனவான் அரசியல் தலைமை என்பதை நிரூபித்த ஒரு பிரதமராக உங்களை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோம் என்பதனை உறுதிபட தெரிவிக்கிறோம்.

அத்துடன் உங்களது அம்பாறை மாவட்டத்துக்கான  விஜயம் சாய்ந்தமருது மக்களுக்கான விடியலை பெற்றுத்தரும் ஒரு வரலாற்று நிகழ்வாக அமையட்டும் என வாழ்த்துகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X