2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதுக்கான நகர சபையை உருவாக்கிக் கொடுக்காவிடின் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 03 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சாய்ந்தமருதுப் பிரதேச மக்களுக்காக நகர சபையை சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக உருவாக்கிக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இந்த நகர சபையை உருவாக்கிக் கொடுக்காது விடப்படுமாயின், பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
சாய்ந்தமருதுப் பிரதேசத்திலுள்ள அ.இ.ம.காங்கிரஸின் அம்பாறை மாவட்டத் தலைமையகத்தில் திங்கட்கிழமை (02) மாலை விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும்; நிகழ்வு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சாய்ந்தமருது மக்கள் எதிர்நோக்கும் உள்ளூராட்சிச் சபையுடன் தொடர்புடைய பிரச்சினைகளை கையாள்வதற்கு அவர்களுக்கு தனியானதொரு சபை இல்லை. இது தொடர்பில் பல வருடங்களாக சம்மந்தப்பட்டவர்களை சாய்ந்தமருதுப் பிரதேச மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்' என்றார்.  

'காலங்காலமாக இந்த மக்கள் வாக்களித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைக் கோரி வருகின்றனர். ஆனால், அக்கட்சி சில தனிப்பட்டவர்களின் நிகழ்ச்சிநிரலில் இயங்கிக்கொண்டு இந்த மக்களின் நியாயமான கோரிக்கையை பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வருகின்றது' என்றார்.

'கடந்த காலத்தில் இம்மக்களின் நகர சபைக்கான நியாயமான கோரிக்கையை உணர்ந்த நான், மாகாண சபையில் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினேன். ஆனால், சபையால் அங்கிகரிக்கப்பட்ட கோரிக்கையை மு.கா. தடுத்து வைத்துள்ளது. தொடராக தேர்தல் காலங்களில் மட்டும் எமது பகுதிகளுக்கு வருகை தந்து போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வரும் இவர்களை மக்கள் இனங்காண வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X