2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தம்பிலுவில் கிராமத்தில் பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா,வி.சுகிர்தகுமார்,கனகராசா சரவணன்

'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் தொனிப்பொருளில் மத்திய கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்தில் தம்பிலுவில் கிராமத்தில் எந்தவொரு பாடசாலையும் தெரிவு செய்யப்படவில்லையெனக் கூறி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் பெற்றோர்கள் ஈடுபட்டனர்.

தம்பிலுவில் மத்திய பொதுச்சந்தைக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் சென்ற பெற்றோர்கள், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனிடமும் மகஜர் கையளித்தனர்.

இதன்போது திருக்கோவில் பிரதேச செயலாளர் தெரிவிக்கையில், 'திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கிராமம் சனத்தொகை அதிகமாகக் கொண்டதாகும். இம்மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, கல்வியமைச்சின் செயலாளருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில், ' 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் தொனிப்பொருளிலான திட்டத்துக்காக திருக்கோவில் கல்வி வலய அதிகாரிகளினால் பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், தம்பிலுவில் கிராமத்தில் எந்தவொரு பாடசாலையும் தெரிவு செய்யப்படவில்லை. இக்கிராமத்திலுள்ள பாடசாலைகள் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளினால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் எமது கிராமத்திலுள்ள பாடசாலைகளும் உள்வாங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கொள்ள வேண்டும். நீதியான முறையில் கல்வி அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் இதற்கான சிறந்த தீர்வை  எமக்கு வழங்காவிடின், எமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாது கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம்' என்றனர்.  

இது தொடர்பாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனிடம் கேட்டபோது, இத்திட்டம் மத்திய கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய திட்டம்.

அதற்கு திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரிவுக்குட்பட்ட வளம் மிக்க பாடசாலைக்கு சமாந்தரமாக இன்னும் ஒரு பாடசாலையை அபிவிருத்தி செய்வது இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு அமைவாக தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்துக்கு சமாந்தரமாக திருக்கோவில் எம்.எம்.டி.எம்.பாடசாலையையும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இராமகிருஸ்ணா கல்லூரிக்கு சமாந்திரமாக அக்கரைப்பற்று ஆர்.கே.எம்.பாடசாலையை இத்திட்டத்துக்கு நாம் தெரிவுசெய்து கல்வி அமைச்சுக்கு அனுப்பி இருந்தோம்.ஆனால், கல்வி அமைச்சினால் திருக்கோவில் பிரதேசத்தில் கோரைக்களப்பு சக்தி வித்தியாலயமும் ஆலையடிவேம்பில் கோளாவில் விநாயகர் வித்தியாலயமும் பொத்தவில் கோமாரி பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு காலமும் கல்வி அமைச்சின் சுற்றுநிரூபங்களுக்கு எதிராக கல்வி அதிகாரிகளாகிய நாங்கள் செயற்பட முடியாது.இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X