Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை உரியவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய முஸ்லிம் கவுன்சில் தீர்மானித்துளது.
தேசிய முஸ்லிம் கவுன்சிலின் மீயுயர் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு, அதன் கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. இது குறித்து கவுன்சிலின் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் கூறியதாவது,
'2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உயிர், உடமை, வீடுகள் என பாரிய அழிவுகள் ஏற்பட்டன. இதனால் வீடு, வாசல்களை இழந்து நிர்க்கதியான குடும்பங்களுக்கு 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் ஏற்பாட்டில், சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
எனினும், சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத அம்பாறை, தீகவாபி சிங்கள மக்களுக்கும் இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டதுடன், அது தொடர்பில் ஜாதிக்க ஹெல உறுமய, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இதன் பிரகாரம், இன விகிதாசார அடிப்படையில் அவ்வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சர்ச்சை காரணமாக அவ்வீடுகள் 10 வருடங்களாகியும் இன்னும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ளன. அந்த வீடுகளும் தற்போது சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியும் பற்றைக்காடாகக் காணப்படுகின்றது. ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகளும் ஜாதிக்க ஹெல உறுமயவும் அரசாங்கத்தில் கைகோர்த்துக்கொண்டு பங்காளிக் கட்சிகளாக இருந்து வருகின்ற போதிலும், இது விடயத்தில் சமரச தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை.
ஆகையினால், இனியும் காலம் இழுத்தடிக்கப்படாமல் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைமைகள் போன்றோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு நியாயமான தீர்வை எட்டும் பொருட்டு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து எமது தேசிய முஸ்லிம் கவுன்சில் விரிவாக ஆராய்ந்து வருகின்றது' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025