2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் உபகல்வி வலயத்தை தரம் உயர்த்த கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் உபகல்வி வலயத்தை அதிகாரமுள்ள தனிக் கல்வி வலயமாக தரம் உயர்த்துவதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் தலைமையிலான குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீருக்குமிடையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்றது.

இதன்போது, பொத்துவில் பிரதேசத்தில் கடந்த வருடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த உபகல்வி வலயம் அதிகாரமற்றதொரு வலயமாகக் காணப்படுகிறது. இது பெயரளவில் மாத்திரம் இயங்குகின்றதே தவிர, அங்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அங்கு எந்த வேலைகளையும் மேற்கொள்ளமுடியாத நிலைமை உள்ளது. எனவே, பொத்துவில் உபகல்வி வலயத்தை அதிகாரமுள்ள தனிக் கல்வி வலயமாக தரம் உயர்த்துவதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரப்பட்டது.

மேலும், பொத்துவிலிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றுவதற்காக புதிதாக வருவதற்கு ஆசிரியர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து சுமார் 60 கிலோமீற்றர் தொலைவில் பொத்துவில் பிரதேசம் அமைந்துள்ளது. இதனால், பயணநேரம் அதிகமாக உள்ளதுடன்,  போக்குவரத்துப் பிரச்சினையும் உள்ளது. குறிப்பிட்டதொரு நேரத்துக்கே பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.  

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், 'பொத்துவில் உபகல்வி வலயத்தை அதிகாரமுள்ள தனிக் கல்வி வலயமாக தரம் உயர்த்துவதற்காக அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் அப்பத்திரத்தை சமர்ப்பித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்' என்றார்.

அத்துடன், பொத்துவில் பிரதேசத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பில் கல்வியமைச்சர் உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலை ஆரம்பமாக முன்னர் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .