2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல். மப்றூக்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களாக மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்த போதிலும், கடந்த திங்கட்கிழமை சீரான காலநிலை நிலவியது.  ஆயினும், நேற்றுமுன்தினம் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தமை காரணமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை மிக உயர்ந்துள்ளன. குறிப்பாக, பச்சை மிளகாய் கடந்த ஒரு மாத காலமாக ஒரு கிலோகிராம் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.  கரட் மற்றும் போஞ்சி ஆகிவற்றின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவை ஒரு கிலோகிராம் 280 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன.

ஆயினும், வரவு – செலவுத் திட்டத்தில் விலை குறைப்புச் செய்யப்பட்டமை காரணமாக, சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் வெங்காயம் மற்றும் உறுளைக்கிழங்கு ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கின்றமை மக்களுக்கு மகிழ்ச்சியான விடயமாகும்.

அந்தவகையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 90 ரூபாய்க்கும் உறுளைக்கிழங்கு 80 ரூபாய்க்கும் சில்லறை விலையில் விற்பனையாகின்றன.

இந்த நிலையில், உள்ளூர் மரக்கறிகளின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. சாதாரண நாட்களில் ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்பட்ட பயிற்றங்காய், தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக 280 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதேவேளை, தொடர் மழை காரணமாக நெற் செய்கை நடவடிக்கைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .