2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முதலாம் பாடத்தை உடற்பயிற்சிக்கு பயன்படுத்த சட்டமசோதா கொண்டுவர ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

தொற்றா நோய்களிலிருந்து மாணவர்களைப்  பாதுகாக்கும் நோக்கில் பாடசாலைகளில் முதலாம் பாடத்தை மாணவர்களின் உடற்பயிற்சிக் கல்விக்கு பயன்படுத்த சட்ட மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டு வரவுள்ளதாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம்   தெரிவித்தார்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர்கள் தின நிகழ்வு, நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை  வைத்தியசாலையில் இடம்பெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எமது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் தொற்றா நோய்கள் தீவிரமாக பரவி வருகின்றன. சுமார் 40 - 50 சதவீதமானவர்களுக்கு தொற்றா நோய்கள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் நம்மவர்களின் உணவுப் பழக்கமாகும். இவ்வாறு நாடு பூராகவுள்ள தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றது.

இன்று மாணவர்கள் மற்றும் இளைஞர்;களை விளையாட்டு மைதானங்களில் காணவில்லை. ஏனெனில், மாணவர்கள் கல்விக்காக அவர்களின் விளையாட்டு நேரங்களையும் சேர்த்து செலவிடுகின்றனர். இதனால் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டி நிகழ்வுகளில் மைதானங்களில் மாணவர்களை காணவில்லை. இதனால் எதிர்காலத்தில் இளம் வயதில் எமது மாணவர்களும் தொற்றா நோய்க்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

இதனை தடுக்கும் முகமாகவே பாடசாலைகளில் முதலாம் பாட விதானத்தினை மாணவர்களின் உடற்பயிற்சி கல்விக்கு பயன்படுத்த சட்ட மசோதா ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளேன்.

எமது நாட்டு தாதியர்களின் சேவைகள் வெளிநாடுகளில் பேசப்படுகின்றது. ஆனால், எமது நாட்டு தாதியர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக செல்ல முடியாதுள்ளது. ஏனெனில், எமது நாட்டு தாதியர்களிடம் தாதியர் கல்வியில் பட்டம் இல்லை. இதனால் இச்சந்தர்ப்பம் எமது தாதியர்களுக்கு கிடைக்கவில்லை.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக எமது நாட்டில் தாதியர் கல்வியில் பட்டப் படிப்பினை ஆரம்பிக்கவுள்ளோம். இதன் மூலம் எமது தாதியர்களும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் கூடுதலான சம்பளத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளை பார்வையிட்டோம். வைத்தியசாலை அபிவிருத்திக்;கான மதிப்பீட்டு அறிக்கைகளை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திடமிருந்து கோரியிருந்தோம். ஆனால், மதிப்பீட்டு அறிக்கைகள் இன்றுவரை கிடைக்கவில்லை. அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளனவா? என்பது இன்னும் தெரியவில்லை. இதனால் இவ்வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றோம' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X