2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முஹர்ரம் ஒன்று கூடலும் விசேட சமூகப் பிரகடனமும்

Niroshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-பி.எம்.எம்.எ.காதர்

மருதமுனை அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் விசேட முஹர்ரம் ஒன்று கூடலும்,பிரகடனமும் நேற்று செவ்வாய்க்கிழமை  இரவு மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன்போது, சிறுவர் துஷ்பிரயோகம், போதைவஸ்த்துப்பாவனை உள்ளிட்ட பல்வேறு சமூகச் சீர்கேடுகள் பற்றி ஆராயப்பட்டு இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேலும்,இத்தீர்மானங்களை பிரகடனமாக  ஊருக்கு அறிவிப்புச் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

01. சிறுவர் துஷ்பிரயோகம் நாடு தழுவிய ஒரு சமூக சீர்கேடாக மாறி வருவதால் பெற்றோர் தமது இளம் பிள்ளைகளை வீடுகளில் தீவிரமாகக் கண்காணிப்பதோடு அதிபர், ஆசிரியர்கள் தத்தம் பாடசாலைகளில் இளவயது மாணவர்களின் நல்லொழுக்கம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

02. சிறுவர்களின் உரிமைகள், கடமைகள் பற்றிய இஸ்லாமிய விழிப்பூட்டலை  வெள்ளிக்கிழமை(13) ஜூம்ஆ பிரசங்கங்களில் வலியுறுத்துவதோடு அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? என்பது தொடர்பில் இஸ்லாத்தின் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்க வேண்டுமென குத்பா,பயான் நிகழ்த்தும் உலமாக்களிடம் கோருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

03. போதை வஸ்துப் பாவனை நாடு தழுவிய ஒரு சமூக சீர்கேடாக மாறிவருவதைக்  கவனத்திற்கொண்டு போதையூட்டும் நிறமூட்டப்பட்ட வெளிநாட்டு இனிப்புவகைகள், மிட்டாய்கள் வாங்குவதிலிருந்து  திண்மமான, திரவமான நுகர்வுப்பொருட்களின் பாவனையை விட்டும் எமது இளம் மாணவர் பரம்பரையையும் இளைஞர்களையும் பாதுகாக்கும் அரச, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு சகல பள்ளிவாசல்களும் பாடசாலைகளும் முழு ஆதரவை நல்க வேண்டுமெனவும் மருதமுனை கடற்கரைப் பகுதி, எல்லைக் கிராமப் பகுதிகள், சனநடமாட்டமற்ற பகுதிகளில் பொலிஸ் ரோந்துச் சேவையை நடத்த கல்முனை பொலிஸ் நிலையத்தைகோருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

04. போதை வஸ்துப் பாவனையின் பாரதூரம் தொடர்பில் பாடசாலைளின்  விசேட காலைக் கூட்டங்களிலும் வெள்ளிக்கிழமை(20) ஜூம்ஆப் பிரசங்கங்களிலும் வலியுறுத்துவதோடு இது தொடர்பில் சகல ஊர்  மக்களும் விழிப்புக் குழுக்களாகவும் செயற்பட வேண்டும்.

05. அதிகரித்து வரும் குடும்பப் பிணக்குகள் தொடர்பில் பள்ளிவாசல்களுக்கும் காழி நீதவானுக்கும் இடையில் பரஸ்பர உறவாடல்களை, தொடர்பாடல்களை ஏற்படுத்துவதன் மூலம் விரைவான சமரசம் தீர்வுகளை வழங்க இரு தரப்பும் முடியுமான வேளைகளில் இணைந்து செயற்படுவதெனவும் இதற்கு சம்மேளனம் அனுசரணை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


06. பொதுமக்களின் எழுத்து மூலமான முறைப்பாடுகளை அந்தந்த மஹல்லா மஸ்ஜிதுகளின் நீதி விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் ஒரு குறிப்பிட்ட மஸ்ஜிதால் தீர்க்க முடியாத பிரச்சினை  இருப்பின் மேன்முறையீட்டுக்காக மாத்திரம் சம்மேளனத்துக்கு சமர்ப்பிக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், முறைப்பாட்டுக்காரரின் சார்பில் வாதி, பிரதிவாதிவருகை தரும்போது அவரது முகாமை மரைக்கார் அல்லது டிரஸ்டியும் உடன் சமூகமளிப்பதோடு குறிப்பிட்ட பள்ளிவாசலின் எழுத்து மூல மேன்முறையீட்டுக் கடிதம் கொண்டுவரப்பட வேண்டும் என ஆலோசனை கூறப்படுகிறது.

07. தவறான ஆண்  பெண் தொடர்பாடல் மூலம் ஊரை விட்டும் ஓடிச் செல்லும் ஜோடிக்கு உரிய முறையில் நிகாஹ் நிறைவேற்ற கோரும் பட்சத்தில் விவாகப் பதிவுகார்ரகளோடு கலந்துரையாடி 'ஹூக்ம் ' எனப்படும் பரிசுத்தம் செய்யும் தண்டனையை நிறை வேற்றுவதில் பள்ளிவாசல் பரிபாலன சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

08. வலிகாரன் ஆஜராதல் விடயத்தில் அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்வாக் குழு அனுப்பி வைத்த 'வலிகாரன்' தொடர்பான பத்வாவை கண்டிப்பாக அனைத்துப் பள்ளிவாசல்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மஹர் காட்டப்படல் வேண்டும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.

09. முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட  சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் சிபாரிசு சீர்திருத்தங்கள் உடனடியாக அமுலுக்குக் கொண்டு வர அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற நிலையியற் சட்டத்தின் கீழ் இதுதொடர்பில் முஸ்லிம் எம்.பி. மார்களை தூண்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

10.  அஹதிய்யாப் பாடசாலை ஊக்குவிக்கப்பட்டு பிரத்தியேக வகுப்புக்களை கட்டுப்படுத்துதல்,பிரத்தியேக வகுப்பு நிலையங்களில் ஒழுக்கத்தைப் பேணும் வகையில் ஒரு பொறிமுறையைப் பேணல், இரவு நேர பிரத்திகே வகுப்புக்கள் தடைசெய்யப்படல் வேண்டும், துண்டுப்பிரசுரங்கள், பயான்கள் மூலம் தொடர் விழிப்பூட்டல் மேற்கொள்ளப்படல் வேண்டும், வீடுகளுக்கு துண்டுப் பிரசுரத்தை சேர்க்க வைத்தல் போன்ற அம்சங்களும் எதிர்கால கூட்டங்களில் விரிவாகக்கலந்துரையாடி முடிவு செய்யப்படல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .