2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வயல் காணிகளை கையகப்படுத்துவதைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 2,000 ஏக்கர் வயல் காணிகளை வனவள அதிகாரிகள் நில அளவை செய்து கையகப்படுத்தும் செயற்பாட்டைக் கண்டித்து நாளை வியாழக்கிழமை காலை  பிரதேச செயலகத்துக்கு முன்பாக விவசாய அமைப்புகளின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தோணிக்கல் மேல்;கண்ட கமக்கார அமைப்பின் பொருளாளர் மூ.அழகையா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'தோணிக்கல், தோணிக்கல் மேல்;கண்டம், தோணிக்கல் தென்கண்டம், டிப்போமடு ஆகிய பகுதிகளிலுள்ள வயல் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் வனவள அதிகாரிகள் நில அளவை செய்துவருகின்றனர்.  விவசாயிகளின் காணிகள் விவசாயிகளுக்கே வழங்கப்பட வேண்டும்' என்றார்.    

'1962ஆம் ஆண்டு முதல் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வயல் காணிகளை வனவளமாக்குவதற்கு எடுத்துவரும் இந்நடவடிக்கையானது, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது விவசாயிகள் வைத்துள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆரம்ப காலத்தில் சேனைப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட இக்காணிகள், காலப்போக்கில் வயல் காணிகளாக மாற்றப்பட்டன. இக்காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கைக்கான நீர் பன்னலகம குளத்தினூடாகப் பெறப்பட்டது.

1969ஆம் ஆண்டு நடத்தப்பட்ட காணிக் கச்சேரியூடாக இக்காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை விவசாயிகள் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் ஜயபூமி காணி உறுதி அளிப்பு பத்திரங்களும் இக்காணிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2010.10.01 அன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த எல்லைக்குட்பட்ட காணிகள் வன இலாகாவுக்குச் சொந்தமானதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலுக்கு முன்னர் குறித்த காணிகளானது சட்டரீதியாக அளவீடு செய்யப்படாமலும் இது தொடர்பில் உரிமையாளர்களுக்கும் பிரதேச செயலகத்துக்கும் அறிவிக்காமலும் இடம்பெற்றுள்ளதாவென விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகவே ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்காமல் அவர்களின் காணிகளை அவர்களுக்கே திரும்பப் பெற்றுக்கொடுக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X