2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்களும் செயற்பட முன்வர வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

நாம் எதிர்பார்கின்ற சிறந்ததொரு மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதென்றால் ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்களும் செயற்பட முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (4) மாலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெற்றோர்கள் உங்களது பிள்ளைகளை ஒழுக்க சீடர்களாக வளர்த்தெடுத்தால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் சிறந்த கல்விச் சமுதாயத்தை உருவாக்க முடியும். அவ்வாறு நாம் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக எமது பிள்ளைகளை வளர்க்கா விட்டால் நாம் எதிர்பார்கின்ற ஒரு கல்விச் சமூகத்தை நாம் எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியாது போய்விடும்.

எமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக ஆசிரியர்களை மாத்திரம் நம்பிராமல் பெற்றோர்களாகிய நீங்களும் அதிக கவனம் செலுத்தல் வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறந்ததாக முன்கொண்டு செல்ல முடியும்.

இன்று மாணவர்கள் கல்விக்காகவும் சிறந்த அறிவுத் தேடல்களுக்காகவும் செலவு செய்யும் நேரங்களை விட அதற்கப்பால் சென்று தங்களது அதிகமான நேரங்களை இணையத்தளங்களில் கழிக்கின்றனர்.

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு பயனுள்ளதாக மாற்றி அமைக்காமல்  அதனை பயனற்ற வகையில் பயன்படுத்துகின்றவர்களேயானால் ஒழுக்கநெறி தவறிய மாணவர்கள் சமுதாயமாக மாறிப் போவதை நாம் இன்று பார்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகள் எமது சமூகத்தில் தொடருமானால் எதிர்காலத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் நாம் எதிர்பார்க்கின்ற ஒழுக்கமுள்ள கல்விச் சமூகத்தை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை எதிர்காலத்தில் ஒரு சமூகத்தை வழி நடாத்துகின்றவர்களாகவும் கல்வியலாளர்களாகவும் மாற்ற முன்வர வேண்டும்.

மாணவர்கள் ஒவ்வொருவரிடத்திலும்  எதிர்காலத்தைப் பற்றிய நல்ல இலக்கு இருக்க வேண்டும். அதே போன்று ஒவ்வொரு மாணவரும் நாம் எந்த இலக்கை அடைந்து கொள்ள வேண்டுமென்ற நல்ல எண்ணப்பாட்டுடன் கற்க வேண்டும்.

அவ்வாறு நாம் எந்த இலக்கை நோக்கி நகர வேண்டுமென்ற ஒரு விதையை விதைத்து அந்த இடத்திலிருந்து நாம் எமது நகர்வை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு நோக்கிச் செல்லும் போது ஒவ்வொரு மாணவனும் தாம் அடைந்து கொள்ள எண்ணியிருந்த நல்ல இலக்கை நோக்கி  அடைந்து கொள்ள முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .