2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'இன ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு வடமாகாணசபையிலும் பிரதிபலிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்

இன ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு ஆகியன கிழக்கு மாகாணசபையில் பிரதிபலிப்பது  போன்று, வடக்கு மாகாணசபையிலும் அவை பிரதிபலிக்க வேண்டும் என கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க  தெரிவித்தார்.

'பாதுகாப்பான உணவு, நிலையான விவசாயம்' எனும் தொனிப்பொருளில் விவசாயக் கண்காட்சியும் விவசாயிகள் மாநாடும்  அம்பாறை வீரசிங்க மைதானத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,    'கிழக்கு மாகாணத்தைப் போன்று வடக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதுடன், அவற்றில் அனைத்து அரசியல் தலைமைகளும் அனைத்து இன மக்களும் இன, மத வேறுபாடுகள்  இல்லாது ஒன்றுபட வேண்டும்' என்றார்.

 'தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்தபோது, 'நஞ்சற்ற உணவு, பாதுகாப்பான சூழல்' எனும் தொனிப்பொருளில் எடுத்த முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை.  தற்போது அந்த முயற்சியை வெற்றி கொள்ளச் செய்வதற்காக விவசாய அமைச்சராக என்னை நியமித்து பூரண நம்பிக்கையுடன் அத்திட்டத்தை அவர் முன்னெடுத்துச் செல்கின்றார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் மானிய அடிப்படையில் 350 ரூபாய்க்கு உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டபோது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது அவர்களுக்கு மாத்திரமே மகிழ்ச்சி. அதன் விளைவுகள், பாதிப்புகள் பற்றி கவலை கொள்ளவில்லை. ஆனால், தற்போதைய அரசாங்கம் உரத்துக்குப் பதிலாக பணத்தை வழங்கி வருகின்றது. அப்பணத்தைக் கொண்டு தேவையான அளவு உரத்தையும் சேதனப் பசளையையும் கொள்வனவு செய்யமுடியும்.

நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையிலும் சந்தோஷப்படும் வகையிலும்  விவசாயத்துறையை மாற்ற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். சுத்தமான உணவைப் பெறுவதுடன், ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது அனைவரினதும் கடமையாகும்' எனவும் அவர் கூறினார்.
    
 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X