2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'இலஞ்ச ஊழல் எனும் செயற்பாடு நாட்டுக்கு ஆபத்தாக அமையும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள சில மோசமான பழக்கவழக்கங்களில் இலஞ்ச ஊழல் எனும் செயற்பாடு நாட்டுக்கு பெரும் ஆபத்தானதாக அமையும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

சர்வதேச ஊழல் ஒழிப்பு தின கொண்டாட்டம் இன்று புதன்கிழமை அரச நிருவாக சுற்றறிக்கையின் பிரகாரம் அனைத்து அரச திணைக்களங்களிலும் இடம்பெற்றது. இதற்கமைய அட்டாளைச்சேனை பிரதே செயலாளர் காரியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல் அற்ற தூய்மையான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உன்னத நாளாக இன்றைய நாளினை நினைத்து அனைவரும் அதற்காக பாடுபட்டுழைக்க வேண்டும்.

ஜனாதிபதியினால் மிக முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டு வரும் இந்த ஊழல் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் தனிப்பட்ட ஒவ்வொருவரிடமிருந்தும் மாற்றம் கொண்டு வரப்படுமாயின் மிக இலகுவாக அதனை சாதிக்க முடியும்.

அர்ப்ப சொற்ப இலாபங்களுக்காக ஊழலில் ஈடுபட்டு சமூகத்தில் தலைகுனிவை ஏற்படுத்துவது மட்டுமல்லாது தமது குடும்பத்துக்கும் மாறாததும் மறையாததுமான இழுக்கையும் அபகீர்த்தியையும் பெற்றுக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றான்.

இந்த நல்லாட்சியில் ஊழலுக்கெதிரான செயற்பாடுகள் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களிலும், தற்போதும் ஊழல் மோசடியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக அழைத்துச் செல்லப்படும் போது அவர்கள் தமது கைகுட்டையினால் முகத்தை மறைத்து செல்லும் அவலத்தை காண முடிகின்றது.

அவர்களால் முகத்தை மட்டுமே மறைக்க முடியும். சமூகத்தில் ஏனைய அனைத்து விடயங்களையும் அவர்களால் மறைக்க முடியாது என்பதனை அவர்கள் அறிந்து கொள்வதில்லை.

எதிர்வரும் புதுவருடம் முதல் பிரஜைகள் பட்டயம் எனும் நிகழ்வில் இருந்து இலத்திரநியல் முறைகளில் அரச சேவைகள் கொண்டுவரப்படவுள்ளது. குறித்த வேலையை செய்து வழங்குவதற்கான காலம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதற்காக அரச ஊழியர்களுக்கான பயிற்சிகள், அறிவுறுத்தல்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது என்றார்.

இறுதியில் உயிர் நீத்த படையினருக்காக பிரார்த்தனையும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .