2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கரும்புச்; செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரி அம்பாறை மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று (11) கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஈடுபட்டோர், ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்தனர்.

ஒரு தொன் கரும்புக்கு அதிகரிக்கப்பட்ட 250 ரூபாயை கடந்த ஒக்டோபரில் பெற்றுத் தருவதாக கம்பனி ஒன்று வாக்குறுதி அளித்திருந்தது. இருப்பினும், அதிகரிக்கப்பட்ட அத்தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை என்பதுடன், அத்தொகை வழங்கப்பட வேண்டும்.  

1966ஆம் ஆண்டு சீனிக் கூட்டுத்தாபனத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கரும்புச் செய்கை பண்ணப்படாத காணிகளில் நெற்செய்கை பண்ணுவதற்கான அனுமதி கடந்த வருடம் மாவட்டச் செயலாளரால் வழங்கப்பட்டு, 2,000 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்பட்ட போதும், மிகக் குறைந்தளவான காணிகளுக்கு மாத்திரமே உரமானியம் வழங்கப்பட்டது. எனவே, அனைவருக்கும் உரமானியம் வழங்கப்பட  வேண்டும்.

தரமான முளை திறனுள்ள கரும்புகள் வழங்கப்படாமலும், பொருத்தமான காலத்தில் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்படாமலும் உரிய காலத்தில் அறுவடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமலும் காணப்படும்  அசமந்தப் போக்கினால் அநேகமான கரும்புச் செய்கையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.

கம்பனிக்கும் கரும்புச் செய்கையாளர்களுக்கும் இடையில் இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டோர் முன்வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X