2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'காணாமல் போனோர், காணிகளை இழப்புத் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

யுத்தத்தின்போதும் அதன் பின்னரும்  காணாமல் போனோர் மற்றும்  காணிகளை இழப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லையென சமாதான கற்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.

காணாமல் போனோரின்; உறவினர்களும்  காணிகளை இழந்தவர்களும் துன்பத்துடன் வாழ்கின்றனர் எனவும் அவர் கூறினார்.  

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்களிடம் கருத்தறியும் அமர்வு, சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  'காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் மாவட்டங்கள் தோறும் திறக்கப்பட வேண்டுமென்பதுடன்,  யுத்தத்தால் அங்கவீனமானவர்கள் தொடர்பிலும் இக்காரியாலயம் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன், காணாமல் போனோருக்கான காரியாலயத்தால் பெறப்படும் தகவல்களும் ஆவணங்களும் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும்' என்றார்.

'தங்களின் சொந்தக் காணிகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படல்,  நிலக்கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படாமலுள்ள காணிகள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயம், அபிவிருத்தி, கைத்தொழில் வலயங்கள், புதிய இராணுவ முகாம்கள் ஆகியவற்றுக்காக பெறப்பட்ட காணிகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவேண்டும்.

மேலும், ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக பெறப்பட்ட காணிகளுக்கு புதிய இழப்பீட்டுத்திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒலுவில் துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் விரிவாக்கல் திட்டம் தொடர்பில் அறிக்கையைப் பெற்று அந்த அறிக்கை மக்கள் முன்னிலையில் வைக்கவேண்டும்.

ஒலுவில் துறைமுக அபிவிருத்தியால் தொழிலின்றியுள்ள மீனவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.  அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு முறையாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வண்ணம் சிபாரிசு அமையவேண்டும்.

மக்கள் குடியிருப்பு நிலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, நிலங்களும் அதன் உரிமையும் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், வன இலாகா, தொல்பொருள் திணைக்களம் என்பன 2000ஆம் ஆண்டுக்குப்; பின்னர் அதிகளவான நிலங்களை தம்வசமாக்கி வருகின்றன. அவை பற்றிய விரிவான அறிக்கையை பெற்று மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X