2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'கிராமத்து சிறுவர்கள் மந்த போசனையுடையவர்களாக உள்ளனர்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கிராமங்களிலுள்ள சிறுவர்கள் பெரும்பாலும் மந்த போசனையுள்ளவர்களாக காணப்படுகின்றனர். இதற்குக் காரணம் மாப்பொருள் உணவுகளை அதிகளவில் உட்கொள்வதாகும். அதனை தவிர்த்து தங்கள் வீடுகளில் தயார் செய்யப்பட்ட போசாக்குள்ள உணவு வகைகளை கொடுத்து போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக மாறி சமூகத்தை வழிநடத்தக்கூடிய நாளைய தலைவர்களாக மாறுவார்கள் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை என நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தெரிவித்தார்.

கிராமமட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக்கள் சரியான முறையில் செயற்படுவதன் ஊடாக சிறுவர்களை  துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதுடன், அவர்களை நாளைய தலைவர்களாக மாற்றியமைக்க முடியும் அவர் கூறினார்.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மத்தியமுகாம் -06 கிராம உத்தியோகஸ்;தர் பிரிவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'கிராமத்திலுள்ள தகவல்கள் அனைத்தும் கிராம சேவை உத்தியோகஸ்தரிடம் மாத்திரம் இருக்கவேண்டியதில்லை. கிராம மட்டத்திலுள்ள இத்தகைய குழுக்களும் கிராமத்திலுள்ள சிறுவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்து தேவையேற்படும்போது, உரிய அரச அதிகாரிகளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்க செயற்பட வேண்டும்.

மேலும், பிரதேசத்திலுள்ள வளங்களை இனங்கண்டு அவற்றிலிருந்து உச்சப்பயனை சிறுவர் வட்டத்திற்கு பெற்றுக்கொடுத்து கிராமத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை கட்டியெழுப்ப வேண்டும். அத்துடன், போதைப்பொருள் பாவனையை இல்லாதொழித்து குடும்பங்களுக்கிடையே நல்லுறவையும் சேமிப்பு பழக்கத்தையும் ஊக்குவிப்பதற்கான வழிவகைகளை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களூடாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன்.

சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நன்கறிந்தவர்களாலேயே இடம்பெறுகின்றது. இது தொடர்பில் பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்துவதுடன், இவ்வாறான கிராம மட்ட குழுக்களும் இவற்றை கண்காணிப்பது அவசியமாகும்' எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X