2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு இணையும் மாணவர் தொகையில் வீழ்ச்சி'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 14 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு புதிதாக இணைப்படுகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் சுமார் நான்காயிரமாக குறைவடைந்து வருவதாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

இது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை, திருக்கோவில் குமர வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்த சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றமை, யுத்தத்தில் இறந்து போனமை மற்றும் சுனாமி அனர்த்தத்தில் இறந்து போனமை போன்றவற்றினால் தமிழ் மக்களின் சனத்தொகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இதனை வெளிநாட்டில் வாழ்பவர்கள் மற்றும் இளம் சமூதாயத்தினரும் கருத்திற்கொள்ள வேண்டும்' என்றார்.

'தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் பலமும் குறைவடைந்து, பணப் பலமும் குறைவடைந்து இருக்கின்ற நிலையில் அவர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைவடைந்து வருவதால், எதிர்காலத்தில் அனைத்து வழிகளிலும் பல இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.

மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே  பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கின்றது.

கல்வித்துறைக்கு மாத்திரமல்ல, எல்லாச்  செயற்பாடுகளுக்கும் சனத்தொகை விகிதாசாரம் என்பது முக்கியமான காரணியாக அமைந்துள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X