2025 ஜூலை 05, சனிக்கிழமை

'சரியான முகாமைத்துவத்தின் கீழ் கழிவுகளை அகற்றவும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசங்களில் கல்முனை மாநகர சபையினால் சரியான முறையில் கழிவகற்றல் முகாமைத்துவம் இல்லாததால் அப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.எனவே,கழிவுகளை சரியான முகாமைத்துவத்தின் கீழ் உடனடியாக அகற்ற கல்முனை மாநகரசபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாய்ந்தமருது 10ஆம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை இன்று செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மாநாகர ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதாலும் மக்கள் அக்கறையற்ற விதத்தில் குப்பைகளை வீசுவதாலும் பிரதேசத்தின் சுகாதாரத்துக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த அச்சுறுத்தல் நிலவுகிறது.

கல்முனை மாநகர சபை கழிவுகளை அன்றாடம் அகற்றுகின்ற போதிலும் அது சரியான முகாமைத்துவ அடிப்படையில் அகற்றப்படுவதாக தெரியவில்லை.

கழிவுகளை சேகரிப்பதற்கு வருகை தரும் வாகனங்கள் எந்த எந்த தினங்களில் வருகை தரும் என்பதையும் வாகனங்கள் வருகை தருவதை மக்கள் அறிந்து கொள்வதற்காக கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களுக்கு ஒலி எழுப்பக்கூடிய வசதிகளையும் கல்முனை மாநகரசபை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மேலும்,கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களுடன் அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர் வருகைதர வேண்டும் என்றும்  கேட்கப்பட்டுள்ளது.

மேலும்,சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதி பாலத்தடியில் குவியும் குப்பைகளால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் கழிவுகளை குறித்த இடத்தில் கொட்டி வந்த போதிலும் இப்போது அவ்விடத்தில் சமுர்த்தி சங்கம் தேசிய மரநடுகை திட்டத்தின் கீழ் மரங்களை வளர்ப்பதற்கும் குறித்த இடத்தில் கழிவுகளை போடாமல் தவிர்ப்பதற்காகவும் அந்த இடத்தில்  வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், மக்கள் மாநகர சபை வாகனங்கள் வந்து குப்பைகளை சேகரிக்கும் வரை காத்திருக்காமல் நடுவீதியில் வீசி வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .