2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சிறுபான்மையினர் பாதிக்கப்படும் வகையில் யாப்பில் திருத்தம் கொண்டுவர மு.கா. அனுமதிக்காது'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்

சிறுபான்மையினர் பாதிக்கப்படும் வகையில் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவருவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் உடன்படாதென மு.கா. வின் இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு புதன்கிழமை (13) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொண்டுவரவிருந்த சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் பாதிக்கப்படும் வகையிலான யாப்பு மாற்றத்தை மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஓர் அமைச்சராக இருந்துகொண்டு எவ்வாறு தைரியமாக எதிர்த்து நின்றாரோ, அதேபோன்று தற்போது மேற்கொள்ளப்படும் யாப்பு மாற்றத்தில் சிறுபான்மையினர் பாதிக்கப்படும் நிலவரம் ஏற்படின் அதனையும் தைரியமாக எதிர்த்து நிற்பார் என்பதைத் தெரிவிக்கின்றேன்' என்றார்.  

'தற்போது கொண்டுவரப்படவுள்ள யாப்பு மாற்றம் மொத்தமான நாடாளுமன்ற அங்கிகாரத்துடனான மாற்றமாக இருக்க வேண்டுமென்பதற்காக முழு நாடாளுமன்றத்தையே யாப்புச் சபையாக மாற்றியுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். இந்த அணுகுமுறை மூலம் ஒரு தனியான தரப்பினருக்கு மட்டும் சாதகமானதாகவோ அல்லது இன்னொரு தரப்பினருக்கு எதிரானதாகவோ கொண்டுவரப்படவுள்ள யாப்பு மாற்றம் அமையாது என்பது ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், நிறைவேற்று அதிகாரத்தை எந்தளவுவரை குறைப்பது, தொகுதி நிர்ணயத்தில் சிறுபான்மையினரின் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல், யாப்பு ரீதியிலான அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளில் ஒவ்வொரு சிறுபான்மையினருக்கான பங்கை நிறுவுதல் என்பவற்றில் கவனமாக இருக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால், முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் இதில் மிகக் கவனமாக இருக்கின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X