Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
இலங்கையின் கரையோரங்களில் வாழுகின்ற முஸ்லிம், தமிழ் மக்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றன என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பினை தற்போது பௌத்த பேரினவாதிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இந்த நாட்டின் முஸ்லிம்,தமிழ் சமூகங்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுவதற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புக்களோடு முஸ்லிம்களின் செயற்பாட்டினை முடிச்சுப்போட்டு மீண்டும் இந்த நாட்டினை அமைதியற்ற தேசமாக மாற்றும் ஒரு சூழ்ச்சிகரமான செயற்பாடாகும் என தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 28.12.2015 இல் ஹிரு தொலைக்காட்சியில் இடம் பெற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் ஆனந்த தேரருக்குமிடையிலான விவாதத்தில் கருத்து தெரிவித்த ஆனந்த தேரரினால் விதைக்கப்பட்ட இந்த நச்சுக்கருத்தானது இந்த நாட்டின் அமைதிக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.
நமது நாட்டினை பிரித்தானியர் ஆட்சி செய்தபோது வெளிநாட்டவர் சுதேசிகள் மீது தமது மேலாதிக்கத்தினை செலுத்தி வருகின்றனர். எனவே, அவர்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றி இலங்கையை ஒரு சுதந்திர நாடாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை வெறுமனே சிங்கள தலைவர்களுக்கு மட்டும் எழவில்லை. இந்த நாட்டில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டதன் விளைவுதான் நமது நாட்டுக்கு கிடைத்த சுதந்திரமாகும்.
சுதந்திரமடைந்த நாட்டுக்குள் வாழ்ந்த சிறுபான்மை சமூகமான தமிழ் சமுகத்தின் மீது சிங்களப் பேரினவாதிகள் தமது மேலாதிக்கத்தினை செலுத்தத் தொடங்கினர். அதன் விளைவினை கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாடு கடுமையாக எதிர்கொண்டு இன்னும் ஒரு முடிவினை எட்டமுடியாமல் இருக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினையை மையமாக வைத்து இந்த நாட்டில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றனவே அன்றி, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் உருவாகவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான ஓர் நிரந்தர தீர்வினைக்காண முடியாமல் தனது பதவிக்காலத்தில் இழுத்தடிப்புச் செய்த சந்திரிக்கா அம்மையார் கூட இன்று தற்போது நல்லாட்சியில் ஒழிந்து கொண்டு அமைதியான தேசம் பற்றி பேசி வருகின்றார்.
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டை நிருவாகிப்பதற்குப் பொருத்தமற்றவர் என்று தேர்தல்களில் தோல்வியையே சந்தித்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாணவர்கள் பரீட்சையில் குதிரை ஓடுவது போல், மைத்திரி என்னும் குதிரை மூலம் கதிரையைப் பிடித்துள்ளார். குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்காவது இந்த நாட்டை ஆட்சி செய்து தனதும் தனது கட்சியின் உறுப்பினர்களினதும் அதிகார ஆசையை தீர்த்திருக்கின்றார்.
அரசியல் அமைப்பில் செய்த மாற்றத்தின் மூலம் குறைந்த பட்சமாக நான்கு ஆண்டுகளுக்கு தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதே நல்லாட்சி அரசாங்கம் செய்த மிகப்பெரும் மாற்றம் ஆகும்.
பெரும்பாண்மை சமூகத்தின் மேலாதிக்கத்திலிருந்து தம்மை விடுவிக்க போராடிய ஆயுத பலம் கொண்ட, தமிழ் சமூகத்தை பிரதிநிதித்தவப்படுத்திய அமைப்புக்கள் தமது அதிகாரம், ஆதரவு ஆகியவை மேலோங்கிய போது தம்மை விட சிறுபாண்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள் மீது தமது மேலாதிக்கத்தினை செலுத்த தவறவில்லை. ஒரு சமுகத்தின் விடுதலைக்காக போராடிய அமைப்பு இன்னொரு சமூகத்தை தனக்கு கொத்தடிமைகளாக மாற்ற முயற்சித்ததே அன்றி, அந்த மக்களுக்கும் வாழ்வியல் உரிமை இருக்கின்றது. என்பதை உணர தவறியதன் விளைவு இன்று போராட்டம் வெறும் உயிரிழப்புக்களோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் ஆயுதப் போராட்டம் நிலவிய காலப்பகுதியில் காணப்படாத எந்த அச்சுறுத்தலினை முஸ்லிம் சமூகத்தினால் இந்த நாடு இன்று எதிர்கொள்கின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரை ஆயுதப்போராட்டம் என்பது ஒரு தோல்வியடைந்த வரலாறாகும். மீண்டும் அந்த வழியினை தேர்ந்தெடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் ஒன்றும் புத்தி கெட்ட சமூகமல்ல.
நமது நாட்டில் ஆயுதப் போராட்டம் நிலவிய காலத்தில் வடக்கு, கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்று இரண்டு பகுதிகள் இருந்தது. இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் அத்தனையும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகள் ஆகும். இவ்வாறான ஒரு பகுதி இருந்ததனால் தான் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினால் நிலைகொள்ள முடிந்தது.
தமிழ் பேசும் மக்களுக்காகப் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு முஸ்லிம்கள் மீது ஆயுதக் குழுக்கள் மேற்கொண்ட அராஜகத்தின் விளைவாக ஏற்பட்டதே இந்த இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஆகும்.
ஓர் இனம் மற்றோர் இனம் மீது தமது மேலாதிக்கத்தினைச் செலுத்த முற்பட்டதன் விளைவுகளைத்தான் இந்த நாடு காலாகாலமாக அனுபவித்து வருகின்றது. இந்த நிலையிலிருந்த விடுபட வேண்டுமாக இருந்தால் வில்பத்து விவகாரம் என்ற ஒன்று இனிமேல் ஒருபோதும் எழாதவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்.
அதேநேரம், எதிர்கால முஸ்லிம் இளைஞர் சமூகம், பாரியதொரு பிரச்சினையை எதிர்கொள்ளக் கூடிய நிலை, தற்போது நமது நாட்டில் உருவாகி வருகின்றது. நாளை நமது படுக்கை அறைக்குள் வந்து இப்படித்தான் தூங்க வேண்டும், நாங்கள் கூறுபவர் தான் உங்களது தந்தை என்று இந்த பேரினவாத சக்திகள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேநேரம், பிழைப்புக்கு வழியில்லாதவர்களையும் கல்வி அறிவில்லாதவர்களையும் தமது தலைமைகளாக நினைத்து வாக்களிக்கும் நிலையை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்.
அரசியல் ஒரு தொழில் எனக்கருதி அரசியலுக்கு வந்து பிச்சைச்சம்பளம் முதல் வீதி அபிவிருத்தி வரை மோசடி செய்து இலாபமீட்ட வருபவர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கும் நமது அரைவேக்காட்டு முஸ்லிம் கட்சிகள் இனியாவது தகைமையுள்ள, படித்த, சொந்த உழைப்பில் வாழுகின்ற இளைஞர்களை, உள்வாங்கி எதிர்காலத்தில் நமது சமூகத்துக்கு சிறந்த தலைமைகளை உருவாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
அரசியலில் முஸ்லிம் இளைஞர்களின் பங்குபற்றல் அதிகரிக்க வேண்டும். குறைந்த பட்சம் முஸ்லிம் இளைஞர்கள் தனது பூர்வீகத்தையாவது முறையாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago