2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'தங்களை பாதுகாக்கவே பாதயாத்திரையை சிலர் மேற்கொள்கின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

நாட்டின் சமாதானத்தை கெடுத்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பாதயாத்திரையை சிலர் மேற்கொண்டதாக அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையை மழுங்கடித்து உள்ளூர் விசாரணைகள் மூலம் சாதகமான முறையில் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் அவர்கள் கங்கணம் கட்டியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இதற்காகவே முன்னாள் ஆட்சியாளர்கள் சிலர் முன்னெடுத்துள்ள  பாதயாத்திரை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு  மைதானத்தில் இரண்டாவது வருடமாக நடைபெற்ற கிழக்கின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஸ்ண தேசிய பாடசாலைகளுக்கிடையிலான  கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 'தென்கிழக்கு அலகு என்பதை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் முற்றாக வெறுக்கின்றனர். வடகிழக்கு இணைந்த சமஷ்டியிலான தீர்வையே விரும்புகின்றனர். தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதிலும் திடமாகவுள்ளனர். ஆகவே அம்பாறை மாவட்டத்தில் உள்ள 140,000 தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிப்பது அவர்களே தவிர பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களோ அல்லது அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ அல்ல என்பதை உறுதியாக கூறவிரும்கின்றேன்' என்றார்.

'அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் சாதனை படைக்கவேண்டும். சர்வதேச ரீதியில் அவர்களின் புகழ் பரவவேண்டும். அதற்காக தன்னால் முடிந்த உதவிகளை பாடசாலைகளுக்கு வழங்க தயார்' என்றார்;.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X