2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தனி மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்ற முன்மொழிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற வட மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவை எதிர்த்து கிழக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
இது பற்றி உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 'வடக்கு, கிழக்கை இணைத்து விட்டு அதற்குள் முஸ்லிம்களுக்கென தன்னாட்சி பிராந்திய சபை வழங்கப்பட வேண்டும் என வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதானது விசத்துடன் சீனி மிட்டாய் கலக்கப்பட்டது போன்ற செயலாகும்.

முஸ்லிம்கள் தமிழ் பேசுவோராக இருந்தாலும், அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் அல்ல. மாறாக ஆதி காலம் முதல் இலங்கையில் அரபு மொழியில் பேசி வந்த அவர்கள் தமது தமிழ் சூழல் காரணமாக தமிழ் பேசுபவர்கள். இன்றும் கூட அவர்களின் பேச்சு வழக்கில் 20 வீதத்துக்கும் அதிகமான அரபுச்சொற்கள் உள்ளன.
 
அத்துடன், முஸ்லிம்கள் தம்மை தனி இனமாகவே நோக்குகின்றனர் என்பதுடன், இதுவரை காலமும் தமிழ் மக்களும் முஸ்லிம்களை தனி இனமாகவே பார்த்து வந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் வட மாகாண முஸ்லிம்கள் வேறுபடுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதேபோல் 34 வீதமாக வாழும் மட்டக்களப்பு முஸ்லிம்கள் 4 வீத காணிகளுக்குள் முடக்கப்பட்டு தமிழ்ப்; பகுதிகளில் அவர்கள் சுதந்திரமாக காணிகள் வாங்கி வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், யுத்த காலத்தில் ஆயுத முனையில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகளும் பறிமுதல் செய்யப்பட்டமை முஸ்லிம்கள் தனி இனமாக பார்க்கப்பட்டதனால்த்தான் என்பதை மறுக்க முடியாது. அதுபோன்று,  அவர்களை தமிழ் அதிகாரிகள் கூட தமிழர்களாக பார்க்கவில்லை.
 
அதேபோல் முஸ்லிம்களுடன் வாழ முடியாது என தெரிவித்தே கல்முனை தமிழர்கள் தமக்கென தனியான பிரதேச செயலகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவ்வாறெல்லாம் தமக்கு வாசியான நிலைகளில் முஸ்லிம்களை வேறாக பார்ப்பதும் அதேபோல் தமக்கு வாசி என வரும் போது முஸ்லிம்களையும் தமிழர்கள் என கூற முற்படுவது தமிழ் அரசியல்வாதிகளின் தொடரான நிலைப்பாடாகும்.
 
ஆகவே, வட மாகாண சபையின் மேற்படி பரிந்துரையை உலமா கட்சி மற்றாக நிராகரிப்பதுடன், கிழக்கு மாகாணம் தனியாக இருப்பதுடன் கிழக்கு தமிழ் மக்கள் விரும்பினால் அவர்களின் பிரதேசங்களை மட்டும் வடக்குடன் இணைத்துக் கொள்ளலாம் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். அவ்வாறு நடந்தால் கிழக்கு மாகாண சபை சிங்கள மக்களையும் கொண்ட பெரும்பான்மை முஸ்லிம் மாகாணமாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X