2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க போவதில்லை'

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

'தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் நியாயமான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தான் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை' என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 18ஆவது வருடாந்த மாநாடு நேற்று வியாழக்கிழமை, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் வை.முபாரக் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவன் என்ற வகையில் எனது பதவிக்காலத்தில் இங்கு கடமையாற்றும் எந்தவொரு ஊழியருக்கும் அநீதியிழைக்க மாட்டேன். அதேபோன்று, அவ்வாறான செயல்களுக்கு துணைபோகவும் மாட்டேன்.

நான் எப்போதும் ஊழியர்களின் பக்கமே இருப்பேன். ஊழியர்கள் எவ்வித சஞ்சலமுமின்றி தங்களது கடமைகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். நிர்வாக செயட்பாடுகளில் சிலசில தடைகள், இடைஞ்சல்கள் வருவது சாதாரணமானதே.

பல்கலைக்கழக சமூகமும் ஒரு குடும்பம் என்ற அடிப்படையில் சிறுசிறு சம்பவங்களை பெரிதுபடுத்தாமல் எல்லோரும் இணைந்து செயற்பட்டால் எம்மால் சுமுகமாக செயற்பட முடியும் என்பதுடன் பல்கலையையும் கட்டியெழுப்ப முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த பல்கலைக்கழகததை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல எவ்வாறான பணிகளை நான் செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களோ அவைகள் அனைத்தையும் செய்ய என்னால் முடிந்த முயற்சிகளை நிச்சயம் செய்வேன்.

நான் இப்பல்கலைக்கழகத்தில் பதவியேற்று 10 மாதங்கள் கடமையாற்றியுள்ளேன். இறைவன் நாடினால் இன்னும் 5 வருடங்களும் 2 மாதங்களும் இங்கு கடமையாற்ற முடியும். கடந்த குறுகிய காலப்பகுதியில் நான் மேற்கொண்ட எந்தவொரு நடவடிக்கையும் இப்பல்கலைக்கழகத்தின் நலனில் கொண்டுள்ள கரிசனையுடனேயே அமைந்திருக்கும்.

ஊழியர் சங்கத்துக்கான அலுவலகம் ஒன்றைக் கோரியிருந்தீர்கள். அதற்கான ஏற்பாட்டுக்குரிய உத்தரவுகளை ஏற்கனவே வழங்கியுள்ளேன். அதேவேளை, ஊழியர் சங்கம் உள்ளக இடமாற்றம் ஒன்றைக் கோருவதால் அதற்கான நடவடிக்கைகளையும் விரைவில் மேற்கொள்வேன். ஏனைய பிரச்சினைகளுக்கும் உரியவர்களுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுத்தருவேன்' என்றார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெசீல், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் பி.எம்.முபீன், உதவிப் பதிவாளர் ஐ.எஸ்.நர்சித் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X