2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'நல்லிணக்கம் வெறும் வார்த்தைகளில் இருக்கக்கூடாது'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

நல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் இருக்கக்கூடாது. செயல் வடிவத்திலும் இருக்கவேண்டும். ஒரு புறம் நல்லிணக்கம். மற்றொரு புறம் அபிவிருத்தி எனும் போர்வையில் தமிழர்களின் நிலம் அபகரிப்பு. கல்முனை பிரதேசத்தை பொறுத்த மட்டில் அவ்வாறுதான் நடைபெறுகின்றது  என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 25ஆவது வருட நிறைவையொட்டி நேற்று (08) சுப்பர் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் இறுதி போட்டிகளின் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'கல்முனைக்குடி எனும் பிரதேசம் இலங்கையின் வரைபடத்திலும் மற்றும் பல்வேறுபட்ட ஆவணங்களிலும் பெயர் குறிக்கப்பட்ட பிரதேசம். இப்பிரதேசம் இன்று அகற்றப்பட்டு கல்முனையோடு இணைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றது. இதனால்; பூர்விகமாக 95 சதவீதம் பெரும்பான்மையாக தமிழர் பிரதேசத்தின் பலம் குறைவடையும் எனவும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கல்முனை நகர் பிரதேசமாக மாற்றம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை அடிப்படையாக வைத்து நகர அபிவிருத்தியை இலகுவாக மேற்கொள்வதும் கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலை தடுப்பதுமே இவர்களது பிரதான நோக்கம்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

'ஆகவே இச்செயற்பாடுகள் யாவும் உடன் நிறுத்தப்படவேண்டும். நல்லாட்சி அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாக மாறிவிடும் என்றார்.

மேலும் திருகோணமலை குமாரபுரத்தில் தமிழர்களை படுகொலை செய்த இராணுவத்தினர் இன்று நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவே தமிழர்கள் உள்ளுர் விசாரணைகளை மறுப்பதற்கான சிறந்த உதாரணமாக கொள்ள முடியும். இதற்காகவே சர்வதேச விசாரணையை தமிழர்கள் கோருகின்றனர்.  

குற்றம் செய்தவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும். ஆகவே, பாதிக்;கப்பட்டவர்கள் ஜனாதிபதியிடம் கோரியது போன்று மேன்முறையீடு செய்யப்பட்டு விசாரணையை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இந்த நல்லாட்சி அரசாங்கத்திடமும் ; ஜனாதிபதியிடமும் கோரிக்கையினை முன்வைக்கிறோம்' என அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X