2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'நேருவின் கூற்று இன்றைய காலக்கட்டத்துக்கு பொருத்தமாக உள்ளது'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

கபடத்தனமான அரசியல்வாதிகளின் கடைசி அடைக்கலமாக தேசப்பற்று எனும் சொல் அமைகின்றது எனும் ஜவகர்லால் நேரு அவர்களின் கூற்று இன்றைய காலக்கட்டத்துக்கு பொருத்தமானதாக அமைவதாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். அதேபோல் கடந்த பல வருடமாக மக்களது உரிமைகளை முற்றுமுழுதாக நசுக்கி தமது குடும்பத்தை ராஜ குடும்பமாக வளர்த்த இந்த நாட்டின் பெரியவர் ஒருவர் இப்போது தேசப்பற்று என புலம்புகின்றார் என கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவு கிராமியகைத்தொழில் அமைச்சர்  கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட சமூகநல்வாழ்வு அமைப்பின் கட்டடத்தில் தலைவர் எஸ்.செந்தூராசா தலைமையில் நேற்று(16)ஆரம்பமான 'உள்ளூர் உற்பத்திப்பொருட்கள்,சந்தைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்த்தல்'  கண்காட்சி நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிறைகளில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் இந்த நாட்டின் அரசியலை புரட்டி அடித்து விடுவார்கள். ஆகவே அவர்களை விடுதலை செய்யக்கூடாது .13ஆவது திருத்த சட்டத்துக்கு அமைவாக வட,கிழக்கு மாகாணங்களுக்கும் வாக்காளர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் வழங்கப்படவேண்டும் என எச்சரிக்கை செய்கின்றார் அந்தப் பெரியவர். இதனையே தேசப்பற்று என்கின்றார்.

அது அவ்வாறிருக்க  மைத்திரியும் மஹிந்தவும் கொழுக்கட்டையும், மோதகமும் என்கின்றனர் நம்மில் சிலர். எல்லாம் ஒன்றுதான் எனவும் எதுவும் நடக்கவில்லை என்கின்றனர். அது உண்மை அல்ல. இன்று எவ்வளவோ மாற்றம் நடைபெற்றிருக்கின்றது. இன்று உள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களது நல்வாழ்வுக்கு முயற்சிக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி ஆளுநர் தடை என்றோம். பிரதம செயலாளர் தடை என்றோம். அவற்றை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

மேலும், நிதி தொடர்பில் தடை இருந்தால் அந்த பூட்டினையும் உடைப்போம். அவ்வாறு உடைக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது.

இந்த நாட்டில் முரண்பாட்டு அரசியல் மூலம் மக்களுக்கு இனிமேல் வாழ்வு கொடுக்க முடியாது எனும் மிக இரகசியமான கருத்தை உணர்ந்துள்ளோம். ஈடுபாடு, பங்குபற்றுதல், செயற்பாடு மூலம் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X