2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'பொத்துவில் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கவும்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

பொத்துவில் பிரதேச விவசாயிகள் அமைப்பும் பொதுமக்களும் இணைந்து பொத்துவில் ஜூம்மா பெரிய பள்ளிவாசல் முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொத்துவில் செல்வவெளிக் காணியை அடையாளப்படுத்தி அதனை செய்கை பண்ணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், வன இலாகா மேற்கொண்டுவரும் தடை உத்தரவுகளை நீக்குமாறும் உரமானியம் மற்றும் நீர்ப்பாசன வசதிகளை செய்து வழங்குமாறும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தூர்ந்து போயுள்ள செல்வவெளி சோளம் குள நீர்ப்பாசனக் குளத்தை நெற்செய்கை காணியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், அதனை புனரமைத்துத் தருமாறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தின்போது  வலியுறுத்தினர்.

விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,
'கிரான் கோமாரி பிரதேசத்தை அண்டியதாக காணப்படுகின்ற சோளம் குள நீர்ப்பாசனக் குளம் மூலமாக செல்வவெளி பிரதேசத்திலுள்ள நெற்செய்கை காணிகளுக்கு சுமார் 1000 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் வழங்கப்பட்டு வந்தது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக இக்குளம் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்துபோய் காணப்படுகின்றது.

இதனை வெளியிடங்களைச் சேர்ந்த சிலரால் அத்துமீறி நெற்செய்கை காணிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்றார்.

இதன்போது மகஜர் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸரத்திடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பாக சம்மமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து சுமூகமான தீர்வு வழஙகப்படுமென பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

'அரசே எமது வளங்களால் நாங்கள் பயன் பெற வழி செய்', 'மாற்றாந்தாய் மனப்பாங்கில் நாட்டு மக்களை வழி நடத்தாதே', 'செல்வவெளிக் காணிக்கான குளக்காணியைப் பறிக்காதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X