Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 13 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வளக்கப்பட்டதைப் போன்று மாற்றுப் பாசறையில் அரசியல் செய்தவர்களை அரவணைத்து அழகு பார்த்தோ, அதே அடிப்படையில் மாற்றுக் கட்சிக்காரர்களை அரவணைத்து எமது இயக்கத்தின் பால் ஈர்க்கின்ற புதிய யுகத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு எமது கட்சி ஆதரவாளர்கள் அனைவரின் மனங்களையும் விசாலப்படுத்த வேண்டும். இது தனது பணிவான வேண்டுகோளாகும் என மு.கா. தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளின் ஓரங்கமாக சம்மாந்துறையில் 'மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை' எனும் தொனிப்பொருளில் முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை மாலை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'இன்று அம்பாறை மாவட்டத்தின் முழு அரசியல் அதிகாரத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் தனது கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்றது. இது எங்களுக்கு இருக்கின்ற அரசியல் அந்தஸ்து மிகப்பெரிய அமானிதமாகும். இது சாமானியமான அமானிதமல்ல. இதன் மூலம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கின்ற அரசியல் அந்தஸ்தின் மூலம் இழந்த அனைத்து அபிவிருத்திகளையும் பெற வேண்டும். அதன் தார்மீகப் பொறுப்பினை எமது தோள்களில் சுமந்துள்ளோம்.
முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புச் செய்த மண் சம்மாந்துறையாகும். சம்மாந்துறையானது விசித்திரமான பூமியாகும். முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் தன்னுடைய பாசறையில் அரசியல் செய்தவர்களுக்கு மாத்திரம் அவர்களை அலங்கரித்து அழகு பார்க்கவில்லை. இந்த நாட்டின் இரண்டு பிரதானமான தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகளையும் நாங்கள் அலங்கரித்து அழகு பார்த்தவர்கள். அந்த கண்ணியமும் கௌரவமும் சம்மாந்துறையைத் தவிர எந்த மண்ணுக்கும் கிடையாது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அசல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மாத்திரம் சொந்தமான கட்சியல்ல. மாற்று அரசியல் பாசறையில் வளர்ந்தவர்களையும் அரவணைத்து அரசியல் அந்தஸ்தினை வழங்கிய கட்சியாகும்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் இழப்புக்கு பிறகு நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியோடு முதல்; தேர்தலில் கூட்டுச் சேர்ந்தபோது எங்களுடைய தலைவருடைய சொந்த வாழ்நாளிலே அவர் அடைய முடியாத இலக்கினை அடைவதற்கு வழி சமைத்தது இந்த சம்மாந்துறை மண்ணாகும்.
கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தபோது ஐ.தே.கட்சியின் தலைவரை சம்மாந்துறையில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களும் மரச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை மரச்சின்னத்தில் நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தலைவருடைய வாழ்நாளில் இல்லையென்ற முயற்சிகள் மேற்கொண்டும் அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தினை வெல்வதற்கு வகுத்த வியூகங்கள் பலிக்கவில்லை. அதை பலிக்க வைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி யானைக்காரர்களின் கால்களுக்குப் புட்டுப்போட்டு அவர்களை மரத்திலே கட்டிப்போட்டு மரத்துக்கு வாக்களித்து வெல்லவைத்து அழகு பார்த்திருக்கின்றோம். இவ்வாறு பல தேர்தல்களிலும் நமது கட்சி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. எனவே, கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து அனைவரும் ஒன்றாகப் பயணிக்கின்ற ஒரு புதிய யுகத்திற்கு எல்லோரையும் இட்டுச் செல்கின்ற புதிய உச்சாகம் எங்களுக்கு மத்தியில் வர வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .