2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'மணிக்கூட்டு கோபுரத்தை புனரமைக்க யார் அனுமதி வழங்கினர்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட மணிக்கூட்டு கோபுரத்தை புனர் நிர்மாணம் செய்வதற்கான அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கியது யார்? அதனை அவர்கள் செய்வதற்கான தேவை என்ன என அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் இன்று திங்கட்கிழமை வெளியட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மக்களை மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் ஆளவேண்டும் அதுதான் ஜனநாயகம். ஆனால் இன்று நாட்டில் இறுதிநிலையில் உள்ள பொதுமகனுக்கும் சேவை செய்யக்கூடிய அமைப்பான உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு 14 மாதங்கள் கடந்த நிலையிலும் தேர்தலை நடத்தாமல் சர்வதிகார ஆட்சியினை கொண்டு செல்வது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் ஒரு செயற்பாடாகும்.

ஒரு உள்நோக்க அங்கமே அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான மணிக்கூட்டு கோபுரத்தை புனர்நிர்மாணம் செய்ய எத்தனிக்கும் செயற்பாடாகும். இம்மணிக்கூட்டு கோபுரமும் வட்ட வளைவும் அனைத்துப் பாதைகளையும் இணைக்கக்கூடிய பொதுவான ஓர் இடத்தில் அமையப்பெறாததன் காரணத்தினால், அவ்வட்ட வளைவை உடைத்து, புதிய வட்ட வளைவை அமைப்பதற்கான தீர்மானம் மாநகர சபையால் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்நிலையிலேயே மாநகர சபை கலைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று மக்களின் வரிப்பணம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் இருக்கும்போது எமது மக்களின் சொத்தான மணிக்கூட்டு கோபுரத்தை சுமார் 3 இலட்சம்  ரூபாய் செலவிட்டு புனர் நிர்மாணம் செய்வதற்கு அரசாங்க அதிபர் ஏன் இராணுவத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டும்? மாநகர சபைக்கு சொந்தமான ஒரு சொத்தின் மீது அரசாங்க அதிபருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதனை அவர் அறியாமலா உள்ளார்.

இராணுவத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு மணிக்கூட்டு கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணியை மாநகர சபை முன்னின்று செய்வதற்கு மாநகரசபை ஆணையாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு அக்கோபுரத்துக்கு தேவையான புதிய மணிக்கூடுகளை கொள்வனவு செய்து பொருத்துவதோடு, மாநகர வரவேற்பு பதாகையும் இணைக்கப்படல் வேண்டும்.
இவற்றுக்கு தேவையான பணத்தினை மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவிட முடியாது என்று மாநகர ஆணையாளர் கருதினால் அத்தொகையினை எமது மக்கள் தருவதற்கு தயாராக உள்ளார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X