2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'மஹிந்த எங்களை ஏமாற்றிவிட்டார்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஒலுவில் துறைமுக நிருமாணப் பணிகளால் காணி இழந்தோருக்கு இழப்பீடாக பணம் வழங்குவதாக கூறி வங்கிக் கணக்கில் காசு இல்லாத காசோலையைத் தந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எங்களை ஏமாற்றினார் என துறைமுகத்தினால் காணி இழக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ. பழீலுல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஒலுவில் துறைமுக நிருமாணப் பணிகளுக்காக ஒலுவில் கரையோரக் கிராமத்தைச் சேர்ந்த 48 குடியிருப்பாளர்களின் 63 ஏக்கர் காணி 2008ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்டது.

ஒரு பேர்ச் காணிக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் காணி இழப்பீடு வழங்கத் தீர்மானித்ததன் பிரகாரம் ஒரு தொகைப் பணம் காசோலையாக 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி  அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தரப்பட்டது.

ஆனால், அந்தக் காசோலையை வங்கியில் பணமாக மாற்ற முற்பட்டபொழுது அது காசு இல்லாத வங்கிக் கணக்கு என காசோலை திரும்பி வழங்கப்பட்டது. இது எங்களுக்கு அவமானமாகவும் ஏறமாற்றமாகவும் இருந்தது.

அதன் பின் இது விடயமாக அட்டாளைச்சேனைப்  பிரதேச செயலாளரிடம் முறையிட்டதற்கிணங்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைமுக அதிகார சபைக்கும் எங்களுக்குமிடையில்  ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அதன் பின்னர் காணியிழந்த 48 பேரில் 32 பேருக்கு காணியிழப்பு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 20 பேருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது.

மதிப்பீடு செய்யப்பட்டவர்களில் மேலும் 12 பேருக்கும் மதிப்பீடு செய்யப்படாத 16 பேருக்குமாக மொத்தம் 28 பேருக்கும் இதுவரையில் எந்த நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை என்றார்.

மேலும், இந்தத் துறைமுகத்திட்டம் இங்கு கொண்டுவரப்பட்டதால் எமது வசிப்பிடம், காணி, தொழில், வாழ்க்கை எல்லாமும் பறி போனதுடன் இப்பொழுது கடலரிப்பால் நாளுக்கு நாள் எமது கிராமமும் அழிந்து போகக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய நல்லாட்சியில் எமது இழப்புகளுக்கு ஒரு முடிவு வேண்டும்.

உலகிலேயே கப்பல் வராத ஒரு துறைமுகத்தை இங்கு வைத்திருந்து மக்களின் வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிப்பதா என்பது பற்றி இந்த அரசாங்கம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X