2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'97 மாணவர்கள் இடைவிலகி இருப்பது கவலைக்குரிய விடயம்'

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்களும் பக்கபலமாவிருந்து செயற்படுவதனால்தான் அவர்களின் பெறுபேறுகள் சாதனைகளாகவும் கல்வி சமூகத்தால் பேசப்படக் கூடியதாகவும் அமைகின்றதென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் தரம் 01 மாணவர்களின் 'ஆசிபெறும் ஆனந்த விழா' நிகழ்வு, அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் இன்று(19) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அதிபர், ஆசிரியர்களுடன் நமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பாக  அறிந்து பிள்ளைகளின் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதன் ஊடாகவே பெறுபேறுகள் சாதனைகளாகவும் நாம் பெருமை அடையக் கூடியதாகவும் அமையும்.

ஒரு காலத்தில் பாடசாலைக்கு புதிதாக செல்லும் போது அச்சமான சூழ்நிலை காணப்பட்டது. இன்று அந்த நிலைமைகள் மாற்றப்பட்டு, புதிய கல்விக் கொள்கையின் கீழ் சிறப்பாக கொண்டு வரப்பட்டு வீட்டுச் சூழலைவிட பாடசாலையையும் பாடசாலை சமூகத்தையும் நேசிக்கக் கூடியவர்களாக இன்றுள்ள மாணவர்களின் மனநிலை மாற்றம் பெற்றிருப்பது சிறந்ததொரு சகுணமாகும்.

அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் முடிவுகளில் அட்டாளைச்சேனையில் இருந்து வைத்திய துறையிலும் பொறியியல் துறையிலும் சாதனை படைக்க முடியாமல் போயுள்ளது.

பல சாதனையாளர்களை உருவாக்கிய நமது பிரதேசத்தில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது குறித்து நாம் எல்லோரும் கவலைப்படுகின்றோம்.  

கல்வி வளர்ச்சியில் நன்கு திட்டமிட்ட முறையில் பல ஆண்டுகள் அர்ப்பணிப்போடு செயற்படும்போதுதான் நமது பிள்ளைகளின் பெறுபேறுகள் சிறந்ததாக அமையும் என்றார்.

மேலும், அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் கடந்த வருடம் 97 மாணவர்கள் இடை விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இம்மாணவர்கள் குறிப்பாக கடற்கரைப் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்படப்பட்டுள்ளது.

வறிய பிரதேசங்களில் கல்வி நிலை வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் இணைந்து செயற்பட்டு நமது பிரதேச கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தி, மாணவர்களின் கல்வி தரம் சிறந்து விளங்குவதற்கான வசதி, வாய்ப்புக்களை நாம் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X