2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரை குத்துவது கண்டிக்கப்பட வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எஸ்.எம்.அறூஸ்,ரீ.கே.றஹ்மத்துல்லா                   

முஸ்லிம்கள் பௌதர்களினதோ இந்துக்களினதோ கிறிஸ்தவர்களினதோ தனித்துவத்தை ஒருநாளும் மறுதலிக்கவில்லை. அதேபோன்று தான்,  முஸ்லிம்களும் தமக்கேயுரிய அடையாளங்களோடு வாழ நினைப்பதில் என்ன தவறிருக்கிறது. எமக்கான சமூக, மத, கலாசார தனித்துவத்தைப் பேணுவது எமக்குரிய அடிப்படை உரிமையும் எமது அபிலாசையுமென்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

புதன்கிழமை(20) பிற்பகல் 3.30 மணியளவில் அக்கரைப்பற்று பதூர் ஜும்மா பள்ளிவாயலின் புதிய நம்பிக்கையாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறுபான்மையாக ஒரு நாட்டில் வாழ்வதன் தாக்கத்தை சுதந்திரத்தின் பின்னர் உடனடியாக மலையக மக்கள் அனுபவித்தனர். அவர்களின் வாழ்வுரிமை உடனடியாகவே கேள்விக்குட்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தந்தை செல்வா அவர்கள், தமிழ் காங்கிரஸ் தனது பாத்திரத்தை சரி வர ஆற்றவில்லை எனக்கூறி தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கினார். அவர் சிறுபான்மை இனங்களான தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையக மக்களுக்காக துணிந்து நின்று  குரல் கொடுத்தார்.

அவரது குரலுக்கு செவி சாய்க்காமல் சிறுபான்மையினரின் கல்வி, நிலம், பொருளாதாரம் மற்றும் வாழ்வுரிமை மீது தொடர்ச்சியான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான அணுகுமுறைகள் அரசிற்கு எதிரான தீவிர வன்முறை வழிகளில் நாட்டத்தை ஏற்படுத்தி புதிய பரிணாமம் எடுக்கத் தொடங்கின. அதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தம், தமிழர்களின் மூன்று அரசியல் கட்சிகள் சேர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து, புதிய ஜனநாயக முயற்சிகளைச் செய்தனர்.

அதற்குப் பின்னரும் தொடர்ச்சியான அதிகார அடக்குமுறைகள் கைக்கொள்ளப்பட்டமையால், முழு ஆயுதப் போராட்டமாக வடிவமெடுத்து மொத்த நாடுமே பெரும் துன்பங்களுக்கும் இழப்புக்களுக்கும் முகம்கொடுத்து நின்றது என்கிற வரலாற்று அனுபவம் நம் எல்லோரையும் வழிநடாத்த வேண்டும்.

முஸ்லிம் தலைவர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக எந்த எதிர்பார்ப்புமில்லாமல் போராடினார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் எந்தப் பிரிவினையையும் அவர்கள் முன்வைக்கவில்லை. அவர்களுக்குப் பின்னர் தனித்துவ அடையாள அரசியலை முன்கொண்டு சென்ற முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவர்களும் கூட பிரிவினை பற்றிப் பேசவில்லை. இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தை அன்றைய முதலைமைச்சர் தமிழீழமாகப் பிரகடனப்படுத்திய போது, முஸ்லிம் காங்கிரஸ் அதனை நிராகரித்து வெளிநடப்புச் செய்து, இலங்கையின் இறையாண்மையிலும் ஒருமைத்துவத்திலும் முஸ்லிம்களின் விட்டுக்கொடுக்க முடியாத தன்மையை வெளிக்காட்டி நின்றனர்.

இந்திய இராணுவம் நிரந்தரமாக இலங்கையை ஆக்கிரமித்து நின்று விடுமோ என்ற அச்சத்திலிருந்த இலங்கையின் தலைவர்களோடு கைகோர்த்து,  இந்திய இராணுவம் வெளியிறங்க வேண்டுமென்பதில் பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தீவிரமாக இருந்தார். அதற்காக நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக உரத்த குரலில் உரையாற்றினார். அதேபோன்று இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம், இறையாண்மையுள்ள இலங்கை மீது மேற்கத்திய ஆதிக்கத்தில் ஐ.நா மன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல பிரேரணைக்கு எதிராக அரபு, முஸ்லிம் நாடுகளை அணிதிரள வைப்பதில் பெரும்பாங்காற்றினார்.

முஸ்லிம் தலைவர்களினதும் முஸ்லிம்களினதும் இப்படியான பங்களிப்புக்களை மறந்து, இன்று முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரை குத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதும் வருந்தத்தக்கதுமான விடயமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X