2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம், இழப்பீடு தொடர்பில் சிந்திக்காமல் இருப்பது துரோகம்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இந்த நாட்டில் புரையோடிப்போன இனப் பிரச்சினை மற்றும் இழப்புகள் தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள அக்கறை, அழுத்தங்களினூடாக புதிய அரசாங்கம் தீர்வுக்கு வரக்கூடிய இச்சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் மற்றும் இழப்பீடு தொடர்பான ஆவணப்படுத்தல் பற்றி அரசியல் தலைமைகள் சிந்திக்காமல் இருப்பது சமூகத்துக்குச் செய்யும் பாரிய துரோகமென இழப்பீட்டு ஆய்வு மையத்தின் தலைவர்  அஸ்மி ஏ.கபூர் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவுபெறும் நிலையில், அதற்கான தீர்வு முன்வைக்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை அக்கரைப்பற்றில் சனிக்கிழமை (31) இரவு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு உரையாற்றிய அவர்,  'கடந்த 30 வருடகால இனப் பிரச்சினை மற்றும் யுத்தத்தின்போது, இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகமாகவுள்ள முஸ்லிம் சமூகமும் எல்லா வழிகளிலும் கணிசமானளவு பாதிப்புக்குள்ளாகியது.  
முஸ்லிம் சமூகத்தினர் உயிர், உடைமைகள் தொழிற்றுறை, கல்வியென அனைத்து விடயங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

'குறிப்பாக, வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அகதி வாழ்க்கையில்; 25 வருடங்களை நிறைவு செய்யவுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான தீர்வு இன்னும் எட்டப்படாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறே யுத்த காலத்தின்போது முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட இழப்பீடு, அதற்கான சான்றுகள் எதுவும் ஆவணப்படுத்தப்படாமலும் தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெறுமனே வாய்ப்பேச்சளவில்  இருக்கின்றனர். காத்திரமான தீர்வு எதனையும் இதுவரையில் முன்கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை.  

இன்றுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் தத்தமது அரசியல் நலனுடனும் அரசியல் திட்டங்களுடனும், தத்தமது அரசியல் எதிர்காலத்தையும் முன்னிறுத்தியே பார்த்துக்கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களிடத்தில் சமூகம் சார்ந்த ஒரு நிரந்தரமான தீர்வுத்திட்டம் எதுவும் கிடையாது' எனவும் அவர் தெரிவித்தார்.

'தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படவிருக்கின்ற அவ்வேளையில்; முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இழப்பு பற்றி பேசாமலிருந்துவிட்டு, முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வை எவ்வாறு பெற்றுக்கொள்ளப் போகின்றார்கள்? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X