2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

'வடக்கு, கிழக்கு மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை மட்டுப்படுத்துவதை ஏற்கமுடியாது'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையைப் பயன்படுத்தி ஏனைய மாகாணசபைகள் அதிகாரங்களை பயன்படுத்தும்போது வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக கொண்டுவரப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் முறைமையால் நாட்டில் 09 மாகாண சபைகளுக்கும் அதன் வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெற்றன.
ஆனால், துரதிஷ்ட வசமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற யுத்த சூழ்நிலையால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள், மாகாண சபைகளின் அதிகாரங்களையும் அதன் மூலம் நன்மைகளையும் அனுபவிக்க முடியாத நிலைமை உருவானது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.  

'எமது நாட்டிலுள்ள 07 மாகாண சபைகளுக்கு ஒரு நியாயமும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு வேறு நியாயமான சில செயற்பாடுகளும் அமைந்துள்ளன. 07 மாகாண சபைகளின் தவிசாளர்களினதும் மாகாண சபை உறுப்பினர்களினதும் பிரத்தியேக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சம்பள கொடுப்பனவு வழங்கப்பட்டுவரும் அதேவேளை, கிழக்கு மாகாண சபையின் 05 அமைச்சர்களின் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கு மட்டும் அதிகரிக்கப்பட்ட சம்பள கொடுப்பனவை வழங்கி வருவது ஒரு பாரபட்சமான நிகழ்வாகும்.

இந்த யதார்த்ததை புரியாத கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அரசியல் வியாபாரியாக செயல்பட்டு வருவது குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரங்களை வழங்குவதற்கு நாம் கோரிக்கை விடுப்பதைக் கூட சிலரால் ஜீரணிக்க முடியாமல்; தடுமாறுகின்றனர்.

ஒரு நாட்டில் அமைந்துள்ள 07 மாகாண சபைகளுக்கும் ஒரு அதிகாரமும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு மட்டும் வேறு அதிகாரமும் என்ற நிலையை நாம் அங்கிகரிக்க முடியாது. ஏழு மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கும் மாகாண சபைகளுக்கும் வழங்கப்படும் அதிகாரங்கள் அனைத்தையும் வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களும் பாவிக்க வேண்டும். அதற்காக எங்களால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .