2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முதலமைச்சு பதவி மு.கா.உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும்: ஏ.அப்துல்கபூர்

Kogilavani   / 2015 ஜனவரி 22 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


'பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸுக்கும்; இடையில் ஏற்கனவே செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, கிழக்கு மாகாண முதலமைச்சின் மிகுதியான ஆட்சிக் காலத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்க வேண்டும். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் புதிய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஒப்பந்தத்தை தடையின்றி அமுல்படுத்தவும் வேண்டும்' என கல்முனை பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல்கபூர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அவ்வறிக்கையில்; மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கடந்த, 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் வெற்றியின் பின்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மிகுதியாகவுள்ள இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் முதலமைச்சர் பதவி வழங்குவதென்று தீர்மானிக்கப்பட்டது.


இதன்படி பொதுஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு அவருடைய காலம் முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் மிகுதியான காலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமிக்க பொதுஜன ஐக்கிய முன்னணி வழியமைக்க வேண்டும்.


இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் வடமாகாணத்துக்கு ஒரு தமிழரும் கிழக்கு மாகாணத்துக்கு தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவரும் முதலமைச்சராக வரவேண்டும். வடக்கு மாகாண சபைக்கு தமிழர் சார்பாக சிறந்த ஆளுமைமிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிபதி த.விக்ணேஷ்வரன் முதல்வராக இருந்து செயற்படுகின்றார்.


அதேபோன்று கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பது தான் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். இதனை தமிழ் சமூகமும், அரசியல் தலைமைகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த நிலையில் இன்று நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சூழல் உருவாகி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


கடந்த சில வாரங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்;, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதில் தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையே இழுபறி ஏற்பட்டு முரண்பாடுகள் தலைதூக்கியிருப்பது கவலையளிக்கிறது.


கிழக்கு மாகாண சபைக்கு ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் தான் முதலமைச்சராக வரவேண்டிய தார்மீக பொறுப்புள்ளது.


இதைத்தவிர பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வரவதற்கு ஆதரவளித்து அதற்கு வழிதிறந்து விட்டால் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் சிறுபான்மை சமூகததுக்கு  செய்யும் வரலாற்று துரோகமாகிவிடும்.
அதுமட்டுமன்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால் தான் புதிய ஆட்சியில் சிறுபான்மை சமூகங்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருந்துவரும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.


கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை சிதறடிக்கப்படுமாக இருந்தால் இனி எந்தவொரு காலத்திலும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயற்பட வழியேற்படாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X