2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கல்முனை மாநகர சபையின் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு பணிப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கல்முனை மாநகர சபையில் நிலவும் குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத், மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் முன்னிலையில் மாகாண சபை உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


கல்முனை மாநகர சபையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கூட்டம்  புதன்கிழமை (18) முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பரின்;   வேண்டுகோளின் பேரில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அபே குணவர்த்தன, முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், பிரதிப் பிரதம செயலாளர் குமரகுருபரன், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பத்மநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


அத்துடன் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, உள்ளூhராட்சி உத்தியோகத்தர் எம்.எம்.சர்ஜூன், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.


இதன்போது கல்முனை மாநகர சபையின் அவசரத் தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் விளக்கிக் கூறினார்.


தமது மாநகர சபைக்கான பிரதி ஆணையாளர் உள்ளிட்ட பதவி நிலை, உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.


அத்துடன் மாநகர சபைக்குரிய வளப்பற்றாக்குறைகள் தொடர்பிலும் அதனால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முதல்வர் நிஸாம் காரியப்பர் எடுத்துக் கூறினார்.


தீயணைப்புப் பிரிவுக்கான ஆளணியினர் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த முதல்வர் அப்பிரிவுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட வளங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


இவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்திய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவற்றுக்கான தீர்வுகள் பற்றி மாகாண சபை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சில தேவைகளையும் குறைபாடுகளையும் கூடிய விரைவில் நிவர்த்தி செய்து கொடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X