2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பொலிஸாருக்கு எதிராக பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.கே ரஹமத்துல்லா, எம்.ஏ.தாஜகான்  

பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டியும்;, பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்தும் பொத்துவில் பிரதேசசெயலக ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கின்றனர்.

பொத்துவில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதனால் அவ்வீதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை வழமைக்கு திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.சாரத் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் காணி கச்சேரி நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

காணி கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த பிரதேச அரசியல்வாதியொருவர், தன்வசமுள்ள 3ஏக்கர் காணிக்கு உடனடியாக காணி உறுதிப்பத்திரத்தை வழங்கவேண்டும் என்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் பிரதேச செயலாளரையும் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். 

இதனையடுத்து ஏற்பட்ட குழப்பத்தினால் காணி கச்சேரியும் இடைநடுவில் கைவிடப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பில் அரச கடமைக்கு பங்கம் விளைவித்தார் மற்றும் அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொத்துவில் பொலிஸில் பிரதேச செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார். 

இது இவ்வாறிருக்க  சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அரசியல்வாதி, காணிகச்சேரியில் வைத்து தன்னை தாக்கிவிட்டதாக கூறி பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இவ்வாறான நிலையில், காணி கச்சேரிக்கு இடையூறு விளைவித்தவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொலிஸாரிடம் வினவுகையில், பிரதேச செயலாளரை தாக்கியமைக்கான சாட்சிகள் இல்லையென்று பொலிஸார் அசட்டையாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே, பொலிஸாரின் செயற்பாடுகளை கண்டித்து பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X