2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சுகாதார தொண்டர்களை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 மார்ச் 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் சுகாதார துறையில் எவ்விதமான கொடுப்பனவுகளுமின்றி மிக நீண்டகாலம் தொண்டர்களாக கடமையாற்றிவரும் 125 பேருக்கு நிரந்த நியமனம் வழங்குமாறு அம்பாறை கரையோர மாவட்ட சுகாதார தொண்டர் சங்கத்தின் தலைவரும், பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.நஸீர், சனிக்கிழமை(28) கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சங்கத்தின் நிருவாகக் கூட்டம் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற போதே சங்கத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1999ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுகாதாரத் துறையின் அரச வைத்திய சாலைகள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் தொண்டர்களாக 15 வருடங்கள் எந்தவிதமான கொடுப்பனவுகளுமின்றி மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் தொண்டர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

சுகாதார தொண்டர் சங்கத்தின் தலைவராகவும், பிரதேச சபை உறுப்பினராகவும் தான் செயற்பட்டுவருவதனால் இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டுமென வலியுறுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பிரேரணை ஒன்றும் என்னால் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்திலாவது தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இச்சுகாதார தொண்டர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டுமென சங்கத்தால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

எமது கோரிக்கைகள் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படாது போகும் பட்சத்தில் பாரியளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதப் போட்டங்களையும் முன்னெடுப்பதற்கு எமது சங்கம் தயங்காது எனவும் சங்கத்தின் தலைவர் நஸீர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார தொண்டர் சங்க உறுப்பினர்களுக்கான கூட்டம் எதிர்வரும் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இடம்பெறவிருப்பதாகவும், இதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறும் சங்கத்தால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X