2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நற்பிட்டிமுனை உப தபால் அலுவலகத்தை தரம் உயர்த்துமாறு கோரிக்கை

Thipaan   / 2015 மார்ச் 04 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட நற்பிட்டிமுனை உப தபால் அலுவலகத்தை தரம் உயர்த்தி தபால் விநியோக பிரிவை அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பளீல் பவுன்டேசன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தபால் மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்முனை தொகுதியானது கரவாகு வடக்கு, கரவாகு தெற்கு, கரவாகு மேற்கு, கரவாகு மத்தி என நான்கு உள்ளூராட்சி உப அலுவலகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

கரவாகு மேற்கு பிரிவில் நற்பிட்டிமுனை, திரவந்தியமேடு, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராமங்களில் 5க்கும் மேற்பட்ட அரசாங்க பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச காரியாலயங்கள் காணப்படுகின்றன. இக்கிராமங்களிலிருந்து அதிகமான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்று வருகின்றனர்.

சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை கிராமங்களில் நீண்ட காலமாக இரு உப தபாலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இத்தபாலகங்கள் தரம் உயர்த்தப்படாத நிலையிலிருந்து வருவது பற்றி கோயில்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் தர்மகத்தாக்கள் மற்றும் பொது அமைப்புக்களும் அரசியல்வாதிகள், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆகியோர்களின் கவனத்துக்கு நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கல்முனை தொகுதியிலுள்ள 4 உள்ளூராட்சி உப அலுவலக பிரிவுகளில் கரவாகு மேற்கு பிரதேசத்தை தவிர்ந்த ஏனைய 3 பிரதேசங்களிலும் கடிதங்கள் தரம் பிரிக்கும் தபால் பட்டுவாட விநியோகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.

கரவாகு மேற்கு பிரதேசத்துக்;கு பொதுவாக நற்பிட்டிமுனை கிராமத்திலுள்ள உபதபாலகத்தில் கடிதங்களை தரம் பிரிக்கும் பட்டுவாட விநியோக பிரிவை ஆரம்பித்து வைக்குமாறு கடந்த அரசாங்க காலத்தில் தபால் அமைச்சராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடமும் நாடராளுமன்ற உறுப்பினர்களிடமும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.

நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, திரவந்தியமேடு ஆகிய கிராமங்களை சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வரும் கடிதங்களை உரியவர்களை சந்தித்து சேர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் தபால் சேவகர்கள் அக்கடிதங்களை கல்முனை தபால் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுகின்றனர்.

இதனை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டுமானால் 3 கிலோமீற்றர் தூரம் சென்றே பெற்றுக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதன்காரணமாக பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்வதாகவும் அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X