2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் சிறுவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும்

Thipaan   / 2015 மார்ச் 17 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வயது குறைந்த சிறுவர்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென அவ்வீதியை பயன்படுத்துவோர் விசனம் தெரிவிக்கின்றனர்.   

இச் சிறுவர்களில் கணிசமானோர், பாடசாலை நேரங்களிலும் - வீதி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோமாரியை அண்டிய பகுதிகளிலேயே, அதிகளவான சிறுவர்கள் இவ்வாறு வீதியோர வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது பகுதிகளில் கிடைக்கும் நிலக்கடலை, பனங்கிழங்கு, நாவற்பழம் போன்றவற்றினை இவர்கள் வீதியில் நின்று விற்பனை செய்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

பிரதான வீதியால் பயணிக்கும் வாகனங்களை திடீரென மறித்து, தமது வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு இவர்கள் முயற்சிப்பதால், விபத்துக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  

இவ்விடயம் குறித்து, பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம்.எம். முஷர்ரப்பிடம் நாம் சுட்டிக்காட்டியதோடு, மேற்படி சிறுவர்களுக்கு ஒரு பிரதேச செயலாளராக எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என வினவினோம்.

இதன்;போது அவர் தெரிவிக்கையில்ளூ 'வீதி வியாபாரத்தில் ஈடுபடும் இவ்வாறான சிறுவர்கள் - பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், எத்தனை பேர் உள்ளனர் என்பது தொடர்பில் முதலில் தகவலொன்றினைத் திரட்ட வேண்டியுள்ளது.

கிராம சேவையாளர்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களின் உதவிவுடன் மேற்கூறிய தகவல்களைத் திரட்டிய பின்னர், இது தொடர்பில் - விழிப்புணர்வு நடவடிக்கையொன்றினை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறான வியாபாரங்களில் ஈடுபடவேண்டாமென, பல தடவை இவர்களிடம் நான் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். ஆனால், அவர்கள் தமது செயற்பாட்டினை நிறுத்துவதாக இல்லை.

இந்தச் சிறுவர்களின் தாய்மாரில் யாராவது விதவைகளாக இருப்பார்களானால், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க முடியும்' என்றார்.

இதேவேளை, இவ் விவகாரம் தொடர்பில் - பொத்துவில் பிரதேச சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் கே. ஜேதாஸிடமும் வினவியபோது,

'இந்த சிறுவர்கள் குறித்து நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். இவர்களில் ஒரு தொகையினர் பாடசாலைக்கு சென்று வந்த பின்னர்தான் இவ்வாறான வியாபாரத்தில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கின்றார்கள்.

ஆனாலும், வீதியோர வியாபாரத்தில் ஈடுபட வேண்டாமென பல முறை இவர்களிடம் நாம் வலியுறுத்திக் கூறியும், இவர்கள் - கேட்பதாக இல்லை.

அதனால், இந்த சிறுவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

பாடசாலைக்கு செல்வதற்கான வசதிகள் இல்லாதவர்களுக்கு எம்மால் உதவ முடியும். அதேவேளை, பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கும் உதவிகளை வழங்க முடியும்' என்றார்.

மேற்படி வீதியோர வியாபாரத்தில் - நான்கு மற்றும் ஐந்து வயது சிறுவர்களும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X